பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவம்: சிறப்பு குழுவினர் இன்று முதல் விசாரணை
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டு உள்ளார்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயருடன், முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கில், ஞானசேகரனுடன் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேஹ பிரியா, ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் நகர துணை கமிஷனர் பிருந்தா ஆகியார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.இந்தக் குழுவினர் இன்று முதல் விசாரணையை துவங்க உள்ளனர். அதற்கு முன், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், இதுவரை இவ்வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை விபரங்கள் மற்றும் ஆவணங்கள், சிறப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரன், அவரது மனைவியர் உள்ளிட்டோரிடம் தனித்தனியே, சிறப்பு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர்.அத்துடன், முதல் தகவல் அறிக்கையில், மாணவியின் பெயரை சேர்த்த போலீஸ் அதிகாரிகள், அவை சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்தவர்கள் என, 14க்கும் மேற்பட்டோருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:சிறப்பு புலனாய்வு குழுவினர், இன்று முதல் விசாரணையை துவங்க உள்ளதாக தெரிகிறது.அவர்களிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனு, குற்றவாளி அளித்த வாக்குமூலம், நாங்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை என, அனைத்தும் ஒப்படைக்கப்படும். சிறப்பு குழு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பாதுகாப்புக்கு பேராசிரியைகள் குழுஅண்ணா பல்கலை வளாகத்தில், கடந்த 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழக கவர்னர், உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மாணவ - மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கவர்னரும், அமைச்சரும் உத்தரவிட்டனர்.அத்துடன், பல்கலை வளாகத்திற்குள் வெளியாட்கள் வருவதை கட்டுப்படுத்துவது, வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பது, மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இரவிலும் இயங்குவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும்படி, பல்கலை பேராசிரியர்கள் சங்கத்தினர், கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்நிலையில், மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, பேராசிரியைகள் 16 பேர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 6:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை 49 பேர்; பிற்பகல் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை 49 பேர்; இரவு, 10:00 முதல் காலை 6:00 மணி வரை, 42 பேர் என, 140 காவலாளிகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தவிர, மேலும், 40 காவலாளிகளை சேர்த்து, பாதுகாப்பை பலப்படுத்தவும், வளாகத்தில் ஏற்கனவே உள்ள, அனைத்து, சிசிடிவி கேமராக்களையும் இயங்க வைப்பதுடன், கூடுதலாக, 30 கேமராக்கள் பொருத்தவும் பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரவில், மாணவ - மாணவியர், விடுதிகளில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கவும், அவர்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.