ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு சிக்கல் தீர்வு குறித்த புத்தகம் வெளியிட முடிவு
திருப்பூர்: ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிப்பு குறித்த, லாஜிக்ஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை துணை குழு தலைவர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். இணை செயலாளர் குமார் துரைசாமி, துணை குழு தலைவர் ரத்தினசாமி, உறுப்பினர்கள் ராமு சண்முகம், மகேந்திரன், மதிவாணன், ஆர்பிட்ரேஷன் துணை குழு தலைவர் ராமு உள் ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்றுமதி ஆவணங்கள் ஏற்றுமதித்துறையின் முதுகெலும்பு போன்றது. உலகளாவிய சந்தைகளில், போட்டித்தன்மையை நிலைநிறுத்த, ஆவண தயாரிப்பில் உள்ள சவால்களை தீர்த்து வைக்க வேண்டும். ஏற்றுமதியாளர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள், ஏற்றுமதிக்கு முந்தைய பிழைகள், ஏற்றுமதியின் போதும், அதற்கு பிறகும் நடக்கும் சிக்கல்கள் போன்றவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.பல்வேறு ஏற்றுமதியாளர்கள், ஆவணங்கள், பேக்கேஜ் என, சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். ஆவணம் தயாரிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், அனைத்துவகை ஏற்றுமதியாளர்களுக்கும், நுண்ணறிவை வழங்கும்.விழிப்புணர்வு கருத்தரங்கில் அளிக்கப்பட்ட விளக்கம் மற்றும் படக்காட்சி விளக்கங்கள், புத்தகமாக தொகுக்கப்படும் என, ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பல்வேறு தலைப்புகளின் கீழ் துறைசார்ந்த வல்லுனர்கள் பேசினர்.