அரசு மருத்துவக் கல்லுாரிகளில் செயல்படாத சோலார் பேனல்கள் தமிழக அரசு நடவடிக்கை அவசியம்
விருதுநகர்: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன. அவை முழுமையாக செயல்பாட்டுக்கு வராததால் கல்லுாரி நிர்வாகங்கள் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை தொடர்கிறது.திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூரில் 2022 ஜன., 12ல் அரசு மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.இங்குள்ள மாணவர் விடுதி, பேராசிரியர் குடியிருப்பு, நிர்வாக கட்டடங்களின் மாடியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் 4 ஆண்டுகளாக முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மின் கட்டணத்திற்கு அதிக தொகையை கல்லுாரி நிர்வாகங்கள் செலவிடுகின்றன.சோலார் பேனல்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய பொதுப்பணித்துறை, மெத்தனமாக செயல்படுவதால் அவை பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்பட்டு பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. மக்களின் வரிப்பணமும் வீணாகிறது.எனவே மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அனைத்து சோலார் பேனல்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர புதிதாக அமையும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.