உள்ளூர் செய்திகள்

கரும்பலகையில் ஆசிரியர்கள் தந்த வாழ்க்கை பாடம்! துள்ளி குதித்த பள்ளி பருவத்துக்கு முற்றுப்புள்ளி

பிளஸ் 2 பொதுத் தேர்வு மட்டும் நேற்றோடு முடியவில்லை. தேர்வு முடித்த மாணவ, மாணவியரின் பள்ளி வாழ்க்கையும் நேற்றோடு முடிந்து போனது. மறக்க முடியாத அந்த தருணங்களை, இனி நினைத்து மட்டுமே பார்க்க முடியும். தேர்வு முடிந்தது சந்தோஷமாக இருந்தாலும், பள்ளி காலங்கள் முடிந்தது வருத்தம் தான். மாணவர்கள் இன்னும் உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்கள்...ரேஷ்மா, அரசு மேல்நிலைப் பள்ளி, கெம்பநாயக்கன்பாளையம்:முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உடன்படித்த பள்ளி வகுப்பு தோழிகளை பிரிவது வருத்தம். பள்ளி சுற்றுலா, பள்ளியிலிருந்து வெளியிடங்களுக்கு கல்வி, விளையாட்டு, அறிவியல் என பல்வேறு போட்டிகளுக்கு, தோழிகளுடன் சென்று வந்த இன்ப நினைவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது.துவக்கப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தங்களது சொந்தக் குழந்தைகள் போல் எங்களை பாவித்து, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, ஊக்கப்படுத்த வேண்டிய நேரத்தில் ஊக்கப்படுத்தி, இந்நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.யாழினி, காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி:இப்போது தான் வந்து சேர்ந்தது போல் இருக்கிறது; பள்ளி பருவம் முடிந்துவிட்டது. இறுதி நாளான நேற்று தேர்வு முடிந்ததும், என்னை அறியாமல் கண்களில் நீர் வந்துவிட்டது. நண்பர்கள், ஆசிரியர்கள், வகுப்பறைகள் என, இத்தனை ஆண்டு கால நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து செல்கிறது. கலெக்டராகி என் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவேன். பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், மனம் ஏற்க மறுக்கிறது.அம்ருதா, காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி:பள்ளி பருவம் அழகானது, இனிமையானது. நம் வாழ்க்கையின் முதல் பாடம் துவங்கிய இடம், சுய ஒழுக்கம் கற்ற இடம், பள்ளியின் நினைவுகளை ரசிப்பேன். கல்லுாரி சென்றாலும் புதிய நண்பர்கள் கிடைத்தாலும், பழைய நண்பர்களை எப்போதும் மறக்க முடியாது. வருடம் ஒரு முறை பள்ளிக்கு வந்து, நான் படித்த வகுப்பறைகள், ஆசிரியர்கள் என அனைவரையும் சந்திப்பேன். ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் சோகம்.திவாகர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சூலுார்:பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளி பருவ வாழ்க்கை முடிந்து கல்லூரி பருவத்துக்குள் நுழைய உள்ளேன். டிப்ளமோ அல்லது பி.இ., படிப்பது என தீர்மானித்துவிட்டேன். வெளி உலகில் ஏராளமான சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். எனக்கென்று பொறுப்புகளும் அதிகரிக்கும். புதிய சவால்களை சந்தித்து வெற்றி வாகை சூட தயாராக உள்ளேன்.அபினேஷ், நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்:பள்ளியில், இத்தனை ஆண்டுகள் சக மாணவர்களுடன் பழகியது, நட்பின் துவக்கம். தேர்வின் போது, நண்பர்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடிந்தது. பாதிப்பு என்றால், நண்பர்கள் ஆறுதல் கூறுவர்.இந்த மாணவர் பருவ நட்பு, வாழ்க்கையில் மறக்க முடியாத நிலையில் இருக்கும். பிரிவு என்பது மனதுக்கு வருத்தத்தை தருகிறது. பள்ளி வாழ்க்கை கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும். கல்லுாரி வாழ்க்கை, சற்று சுதந்திரமாக இருக்கும்.இனியா ஸ்ரீ, மெட்ரோ மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்:கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு கேள்விகளில், பாடத்தின் உள்ளே இருந்து, அதிக கேள்விகள் கேட்டு இருந்தனர். பள்ளியில் அதிகளவில் தேர்வுகள் எழுதியதால், பொதுத் தேர்வை எளிதாக எழுத முடிந்தது.எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் கிடைக்கும். பள்ளி வாழ்க்கை நட்பு போன்று, வேறு எதுவும் அமையாது. கல்லுாரி நட்பு என்பது வேறு மாதிரி இருக்கும்.ஜோதிராம், அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி:பள்ளி வாழ்க்கை முடிந்து புதிய வாழ்க்கையை, புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளோம். எப்போதும் நேர்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடுமையான உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி நடந்தால், வாழ்க்கையின் எந்த காலகட்டத்திலும் வெற்றி நமதே.இதை பின்பற்றி நான் மட்டுமல்ல, என்னுடன் பள்ளி வாழ்க்கையை முடிந்து, கல்லுாரி வாழ்க்கையை துவங்கும் அனைத்து மாணவர்களும் பின்பற்றினால் வாழ்க்கை வளமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்