உள்ளூர் செய்திகள்

கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க சொந்த நாடு செல்ல வேண்டாம்; அமெரிக்கா திடீர் பல்டி

வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்கள் நிரந்தர குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' பெற விண்ணப்பிக்கும் போது, தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்க குடியுரிமை அமைப்பு அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது. இதனால், 'கிரீன் கார்டு'க்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு கடந்த 21ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், 'தற்காலிக விசாக்களில், அமெரிக்காவில் தங்கி இருப்பவர்கள் நிரந்தர குடியுரிமைக்கான 'கிரீன் கார்டு' பெற விண்ணப்பிக்கும் போது, அவரவர் தாய்நாட்டுக்கு செல்ல வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.கடந்த அரை நுாற்றாண்டு கால நடைமுறையை மாற்றி அமைக்கும் இந்த உத்தரவு, அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில், அமெரிக்க அரசு திடீரென தன் பிடிவாதத்தை கைவிட்டு, குடியுரிமைக்கான விதிகளை தளர்த்த முன்வந்தது. அதன் அடிப்படையில், அமெரிக்க குடியுரிமை அமைப்பு தளர்த்தப்பட்ட புதிய விதிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:'கிரீன் கார்டு' கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது சொந்த நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.விண்ணப்பதாரர் 'கிரீன் கார்டு'க்கான செயல்முறைகளை அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து முடிக்க வேண்டுமா இல்லையா என்பதை விண்ணப்பங்களின் தன்மைக்கு ஏற்ப முடிவு செய்யும் அதிகாரம் குடியுரிமை அதிகாரிகளுக்கு நீண்ட காலமாகவே இருக்கிறது. இது குறித்து அந்த அதிகாரிகளுக்கு நினைவூட்டல் வழங்கவே முந்தைய அறிவிப்பு வெளியிடப்பட்டதுநிரந்தர குடியுரிமை கோரும் குடியேறிகளில் பெரும்பான்மையானவர்கள், தங்கள் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் போது, அமெரிக்காவிலேயே தொடர்ந்து தங்க அனுமதிக்கப்படுவர்அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கும், தேசிய நலனுக்கும் பங்களிக்கக்கூடிய தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, கூடுதலாக விதிவிலக்குகள் வழங்கப்படும்கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும், அமெரிக்காவில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. விண்ணப்பதாரர்களின் தகுதியை அதிகாரிகள் தங்களின் ஆய்வுக்குப் பின் வழக்கம் போல் முடிவு செய்வர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2024ல் மட்டும் அமெரிக்கா 14 லட்சம் கிரீன் கார்டுகளை வழங்கியுள்ளது. இதில் 8.20 லட்சம் அட்டைகள் அமெரிக்காவில் தங்கியிருந்தபடியே விண்ணப்பித்து பெறப்பட்டவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்