உள்ளூர் செய்திகள்

பெரியார் நூலகத்திற்கு தேவை உற்பத்தி திறன் மையம் தொழில் நிறுவனங்கள், மாணவர்களுக்கு பயனளிக்கும்

கோவை: குறுந்தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் பயனடையும் வகையில் பெரியார் நூலகத்தில் மேம்பட்ட உற்பத்தி திறன் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 8 தளங்களில் பிரமாண்டாக கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் மூன்று மாதங்களில் திறக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். பெரியார் நுாலகத்தின் 5 மற்றும் 6வது தளத்தில், தமிழக அரசின் தொழில்துறைக்கு கீழ் இயங்கும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (டேன்கேம்) செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் (கொசிமா) தலைவர் மதிவாணன் கூறுகையில், “தமிழக அரசு, கொசிமா இணைந்து சிட்கோவில் கடந்த ஓராண்டாக டேன்கேம் மையம் நடத்தி வருகிறோம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு தேவையான மென்பொருள் வடிவமைப்பு, குறைந்த செலவில் மாணவர்கள் புரோஜெக்ட் செய்யப்படுகிறது. சிட்கோவில் இந்த மையம் சிறியளவில் தான் உள்ளது. காந்திபுரம் போன்ற மையப் பகுதியில் பெரியளவுக்கு அமைந்தால் தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் இருவருமே பயனடைவார்கள்,” என்றார்.சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோஸியேஷன் சங்க (சியா) தலைவர் தேவகுமார் கூறியதாவது:பெரியார் நுாலகம் மற்றும் அறிவியல் மையத்தின் 5 மற்றும் 6வது தளத்தில் இன்குபேசன் சென்டர் நிறுவப்படும் என்றனர். இன்குபேசன் மூலம் ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும். டேன்கேம் மூலம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான காம்பனென்ட்களை உருவாக்க முடியும். பெரியார் நுாலகத்தில் இடம் அதிகளவு உள்ளதால் அந்த மென்பொருட்களில் உருவாக்கப்படும் ரோபோ உள்ளிட்ட இயந்திங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதையும் காட்சிபடுத்தலாம். மாணவர்கள் பயிற்சி பெற முடியும். இது குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத்குமாரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்