கூட்டுறவு வங்கியில் வேலை தருவது தொடர்பான புகார் மதுரை மண்டல இணைப்பதிவாளர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை தருவதாக தொடர்பான புகாரின் அடிப்படையில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கி) சுப்ரமணியன் உத்தரவிட்டார்.எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப தமிழகத்தில் அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 'கிளரிக்கல்' வேலை வழங்கப்படும். பட்டம் முடித்து டி.கோப் எனப்படும் கூட்டுறவுத்துறை சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் 'கிளரிக்கல்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சில நேரங்களில் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மத்திய கூட்டுறவு வங்கிப்பணிக்கு அனுப்பப்படுவர். இந்த நடைமுறையில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து கூடுதல் தொகை கொடுத்த சிலருக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை ஒதுக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் கூட்டுறவுத் துறையில் புகார் அளித்தனர். அந்த புகார் தொடர்பாக கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் சுப்ரமணியன் தலைமையில் கடந்த வாரம் மதுரையில் ஆய்வு நடந்தது.சஸ்பெண்ட் உத்தரவுஇதை தொடர்ந்து மதுரை மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று கூடுதல் பதிவாளர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அவருக்குப் பதில் மதுரை நகரக்கூட்டுறவு வங்கி கலைத்தல் அதிகாரி ஹேமா சலோனி, கூடுதல் முழு இணைப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.மதுரை மட்டும் காரணமா?தமிழகத்தில் 2016ல் அப்போதிருந்த கூட்டுறவு பதிவாளர் அண்ணாமலை, மாநில அளவில் நேர்மையாக தேர்வு நடத்தி தகுதியுள்ளோரை நியமித்தார். இதனால் பணப்பரிமாற்றம் தடைபட்டதால் மாநில அளவில் தேர்வு நடத்தும் முறை ரத்து செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கான எழுத்தர் தேர்வு, ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இரண்டு முதல் மூன்றாண்டு இடைவெளியில் இது போன்று தேர்வுகள் நடத்தப்பட்டு பணம் கைமாற்றப்பட்டது. கடந்தாண்டு தேர்வானவர்களில் 60 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிருப்பர். எனவே கடந்தாண்டு தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடந்த 'கிளரிக்கல்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.தேர்வு முறையை மாற்ற வேண்டும்கேரளாவில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நடத்தி கூட்டுறவுத் துறைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆந்திராவில் ஐ.பி.பி.எஸ்., எனப்படும் தேசிய அளவிலான வங்கித் தேர்வு மூலம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு போல 2016ல் தேர்வு நடந்ததைப் போல மாநிலம் முழுவதிற்கும் கூட்டுறவுத் துறையின் கீழ் ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும்.முறைகேடுகளில் ஈடுபட்டால்... கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'மதுரை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சதீஷ்குமார் தன் பணியின் போது முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்ததால் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரித்துள்ளது.