உள்ளூர் செய்திகள்

புதிய தேர்வு விதியை மாற்ற முடியாது - துணைவேந்தர் திட்டவட்டம்

இதுகுறித்து, அவர் கூறியதாவது: மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலாமாண்டில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டிலும் தனித் தனியாக 50 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தினோம். ஏற்கனவே இருந்த தேர்வு முறையில் பெரிய தளர்வு இருந்தது. கிரேஸ் மதிப்பெண் என்று சொல்லப்படும் இலவச மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சியடைந்து பழக்கப்பட்டுவிட்ட நம் மாணவர்கள், இந்த ஆண்டு முதல் கிரேஸ் மதிப்பெண் முறையில் கடுமைகாட்டப்படும் என்று சொன்னதும்  கூச்சலிடுகின்றனர். இந்தாண்டு எழுதிய தேர்வில், முதலாமாண்டு மாணவர்கள், தமிழகம் முழுவதும், 1,300 பேர் தோல்வியடைந்துள்ளனர். பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, அனாடமி ஆகிய மூன்று முக்கிய பாடங்களில் இரண்டு, இரண்டு தாள்கள் உள்ளன. இப்பாடப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 50 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி என, புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டிலும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின், சொத்தை விதியை சுட்டிக்காட்டி, புதிய விதியை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்கலை எடுக்கும் முடிவுக்கு மாணவர்களும், பெற்றோரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முதலாமாண்டு தேர்ச்சி பெறாவிட்டால், இரண்டாம் ஆண்டு படிக்க முடியாது என்ற நிலை எம்.பி.பி.எஸ்., படிப்பில் உள்ளது. இதை மாற்றி, தேர்ச்சி பெறாவிட்டாலும் இரண்டாம் ஆண்டில் அனுமதிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டே முதலாமாண்டில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற வழி செய்ய வேண்டும் என கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். மாணவர்களின் தேர்வுத் தாள்களை மறு மதிப்பீடு செய்வதால் முடிவுகளை அறிவிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். அதற்கு பதிலாக, இரட்டை மதிப்பீடு முறை அறிமுகப்படுத்த உள்ளோம். வினாத்தாள்களை தனித் தனியாக இரண்டு பேர் திருத்துவர். இதில், எது அதிக மதிப்பெண்ணோ அதை எடுத்துக் கொள்வோம். இரண்டு பேர் திருத்தும்போது, இரண்டு மதிப்பெண்களுக்கும் 30 சதவீதத்துக்கும் மேல் வேறுபாடு இருந்தால் மூன்றாவது முறையாக வேறொருவர் மூலம் திருத்தப்படும். இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்ததால் சித்தா, ஆயுர்வேத, யுனானி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது. இருப்பினும், பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தில் மருத்துவ கவுன்சில் தலையிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள். இவ்வாறு மயில்வாகனன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்