நாளைய வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஊக்கம்
பெங்களூரு: வரலாறு தெரிந்தால் தான், நம்மால் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும். தினமலர் நாளிதழை ஒவ்வொரு நாளும் படிக்கும் போது நாட்டு நடப்பு தெரியும் என விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.தினமலர் சிம்மாசனம் விழாவில் இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:சந்திரயான் - 3 செயற்கைக் கோள், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் இன்று செல்ல இருக்கிறது. இது மகிழ்ச்சியான தருணம். சந்திரயான் - 1, சந்திரயான் - 2 திட்டங்கள் தோல்வி அடையவில்லை. சந்திரயான் - 1 செயற்கை கோள் நிலவில் மோதியது. நிலவில் மோத வேண்டும் என்பது போல, நாங்கள் தான் வடிவமைத்தோம். சந்திரயான் - 2 செயற்கை கோள், மெதுவாக இறங்குவதற்கு பதிலாக வேகமாக இறக்கி விட்டது. நிலவில் நீர் இருக்கிறது என்பதை முதன்முதலாக கண்டுபிடித்தது இந்தியா தான். இந்தியா வளரும் நாடு. ஐ.ஐ.டி.,யில் படிப்பவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும். முடிந்தால் நிலவில் இருக்க வேண்டும்.அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களை, சிம்மாசனத்தில் அமர வைத்து தினமலர் கவுரவித்துள்ளது. இந்த சிம்மாசனத்தை பார்க்கும் போது, நமக்கான சிம்மாசனம் காத்திருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். சந்திரயான் - 3 செயற்கை கோளை விண்ணில் ஏவிய குழுவில், இளம் திட்ட இயக்குனராக தமிழர் வீர முத்துவேல் உள்ளார். இது நமக்கு பெருமை. தாய் மொழியில் சிந்திக்கும் போது சுயசிந்தனை வரும். கிராமப்புறங்களில் முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய, மந்த்ரா என்ற பெயரில் அறுவை சிகிச்சை இயந்திரம் உருவாக்கி உள்ளோம்.செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முயற்சியில் இந்தியா முதன் முறையில் வெற்றி பெற்றது. பெரிய பள்ளிகளில் படிப்பவர்கள் செய்ய முடியாததை கூட, சாதாரண பள்ளியில் படிக்கும் நம்மால் செய்ய முடியும். அப்துல் கலாம் வீடு, வீடாக பத்திரிகை போட்டவர். பின்னாளில் அவர் பெயர் பத்திரிகையில் வரும் நிலைக்கு உயர்ந்தார். வரலாறு தெரிந்தால் தான் நம்மால் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும். வரலாறு படைக்க, வரலாறு தெரிய வேண்டும். தினமலர் நாளிதழை ஒவ்வொரு நாளும் படிக்கும் போது நாட்டு நடப்பு தெரியும். நாளைய வரலாற்றில் நீங்களும் இடம் பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.