டியூகாஸ் நிறுவன பஞ்ச கவ்யம் தரம்: வேளாண் பல்கலையில் விற்பனை நிறுத்திவைப்பு
கோவை: விவசாயிகள் தெரிவித்த புகாரை தொடர்ந்து, டியூகாஸ் நிறுவனத்தில் பஞ்ச கவ்யம் விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் ஜன., 31ல் நடந்தது. டி.ஆர்.ஓ., ஷர்மிளா தலைமை வகித்தார்.அதில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி பேசுகையில், வேளாண் இடுபொருட்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. அதன் தரத்தை எப்போதும் உறுதி செய்து கொள்ள வேண்டும். டியூகாஸ் நிறுவனத்தில் தரமற்ற, போலி பஞ்ச கவ்யம் விற்கப்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.அந்நிறுவனத்தில் வாங்கிய பஞ்ச கவ்யம் டப்பாவை, அதிகாரிகளிடம் விவசாயிகள் வழங்கினர். இதுதொடர்பாக ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்ய, வேளாண் அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.இதன்படி, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையிலான அதிகாரிகள், டியூகாஸ் நிறுவனத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். பஞ்ச கவ்யம் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது; அங்கீகாரம் பெற்ற நிறுவனமா; எப்போது கொள்முதல் செய்யப்பட்டது; இதுவரை எத்தனை டப்பா விற்பனையாகி இருக்கிறது; இன்னும் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்கிற விபரம் சேகரித்தனர். பின், அதன் தரத்தை உறுதி செய்ய, மாதிரி சேகரித்து, வேளாண் பல்கலைக்கு அனுப்பினர்.இதுதொடர்பாக, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில், டியூகாஸ் நிறுவனம் விற்பனை செய்த பஞ்ச கவ்யம் தரத்தை உறுதி செய்ய, வேளாண் பல்கலையின் பகுப்பாய்வுக்கு அனுப்பி உள்ளோம். அதன் விற்பனையை நிறுத்தி வைத்திருக்கிறோம். பகுப்பாய்வு அறிக்கைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும், என்றார்.