உள்ளூர் செய்திகள்

சமூக ஊடகங்களில் மூழ்கும் மாணவர்கள்; தனியார் பள்ளிகள் சங்கம் எச்சரிக்கை

பெங்களூரு: பள்ளி மாணவர்கள், தாங்கள் அபாயத்தில் உள்ளது தெரியாமல், சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கின்றனர். அவர்களை கண்காணிக்கும்படி, பெற்றோருக்கு, தனியார் பள்ளிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சியால் மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது, இளம் சமுதாயத்தினர் குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 3 வயதில் நர்சரி செல்லும் குழந்தைகளிடம் உணவு சாப்பிட மொபைல் போனை கொடுப்பதை பழக்கமாக்கி விட்டோம்.இதனால் சிறுவயதிலேயே தொழில்நுட்பத்தை கையாள தெரிந்து கொள்கின்றனர். முகநுால், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைதளங்களில் பள்ளி மாணவ - மாணவியர் கணக்குகளை துவக்கி கையாளுகின்றனர்.இதனால் சமீபத்தில் பெங்களூரில் வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில் 'ஆக்டிவாக' உள்ள பள்ளி மாணவி ஒருவரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அம்மாணவிக்கு அனுப்பி மிரட்டி உள்ளார்.இதுபோன்று, 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இன்டாகிராம் குழு துவக்கி, அதில் பள்ளி மாணவியரின் படத்தை 'டீப் பேக்' மென்பொருளை பயன்படுத்தி, ஆபாசமாக சித்தரித்து பகிர்ந்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.இதனால் உஷாரான தனியார் பள்ளிகள் சங்கம், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் எழுதி உள்ளது.அதில், தற்போதைய குழந்தைகள் சமூக வலைதளங்களில் மூழ்கி உள்ளனர். தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர். பெற்றோருக்கு தெரியாமல், வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி, பல சமூக வலைதளங்களில் ரகசியமாக செயல்படுகின்றனர். சமூக வலைதளங்களில் திட்டுவதும், வெறுப்பதும், அவமானப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.மேலும், 5 - 6ம் வகுப்பு மாணவர்கள் கூட, ஆன்லைன் வணிகம், ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் மொபைல் போனை தவறாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல கல்வி நிறுவனங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. எனவே, குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருங்கள் என குறிப்பிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்