தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு இவங்களே காரணம்: சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்
சென்னை: தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரே காரணம் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.இது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக செய்துள்ளதால் முதலிடம் கிடைத்துள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரே மகத்தான வெற்றிக்கு காரணம். ஐஐடியில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.சென்னை ஐஐடி.,யில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள், ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டன. முதல் 3டி பிரிண்டட் ராக்கெட், முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நாங்கள் செய்துள்ளோம். ஹைப்பர்லூப் உள்ளிட்ட பல திட்டங்களை செய்துள்ளோம். ஸ்டார்ட்அப் 100 போன்ற சில தொலைநோக்கு திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.இதெல்லாம் முழுமையடைய 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். நம் நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஒரு இளநிலை பட்டப்படிப்பையாவது படிக்க வேண்டும். அதற்காக சென்னை ஐஐடி.,யை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்ல எங்கள் முயற்சியை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.