வேளாண் பல்கலை ஆராய்ச்சிகள் விவசாயிகளை சென்றடைவதில்லை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதங்கம்
கோவை: பல்கலை கட்டடத்துக்குள்ளேயே ஆராய்ச்சிகள் நின்று விடக்கூடாது. வேளாண் பல்கலையால் லாபகரமான விவசாயம் இல்லை என்ற கேள்வி எழுந்து விடக்கூடாது என தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.கோவை வேளாண் பல்கலையில், ஐந்து நாள் மலர் கண்காட்சியைத் துவக்கிவைத்து அவர் பேசியதாவது:விவசாயத்துக்கு மின்சாரம் முக்கியம். யூனிட்டுக்கு 1 பைசா மின்கட்டணம் குறைக்கக்கோரி, நாராயணசாமி நாயுடு தலைமையில் போராடிய விவசாயிகள், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் அறிவித்தவர் கருணாநிதி தான்.தற்போதைய தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் வேளாண் பல்கலையை துவக்க உத்தரவிட்டவர் கருணாநிதி தான்.பல்கலையில் நடக்கும் ஆராய்ச்சிகள் நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடப்பதால் பயனில்லை. ஆராய்ச்சியின் பலன்கள், வெளியே உள்ள விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். வேளாண் பல்கலைக்கு அரசு நிறைய செலவு செய்கிறது.அதனால், விவசாயிகளுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது என்பதை, வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.மற்ற மாநில அரிசி ரகங்களை நாம் பயன்படுத்துவது போல, தமிழக அரிசி ரகங்களை பிற மாநில மக்களும் வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு ஆராய்ச்சியின் பலன் இருக்க வேண்டும். வேளாண் பல்கலையால் லாபகரமான விவசாயம் இல்லை என்ற கேள்வி எழுந்துவிடக் கூடாது.வேளாண் பல்கலையில் ஆராய்ச்சி பிரிவுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைவராக நியமிக்க அரசு ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.