எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி முதல்வர் பணியிடம் ஒரு ஆண்டாக காலி
திருப்பூர்: மாநிலத்திலேயே அதிக மாணவியர் படிக்கும் அரசு கல்லுாரிகளில் இரண்டாமிடம் வகிக்கும் திருப்பூர், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் முதல்வர் பணியிடம் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரில் 2 கல்லுாரிகள் உள்பட ஏழு இடங்களில் அரசு கலைக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. உடுமலை, அவிநாசி, பல்லடம், காங்கயம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரிகளுக்கு முதல்வர் உள்ளனர்.ஆறு இளங்கலை பாடப் பிரிவுகள், 230 இடங்களை கொண்ட தாராபுரம் அரசு கலைக்கல்லுாரியில்முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. வணிகவியல் துறைத்தலைவர் புஷ்பலதா, கூடுதல் பொறுப்பாக, கல்லுாரி முதல்வர் பதவியையும் கவனிக்கிறார்.திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் மொத்தம் 1,086 இடங்கள் உள்ளன. மாநிலத்தில் அதிக மாணவியர் படிக்கும் அரசு கல்லுாரிகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. மொத்தமுள்ள இடங்களை விட, நான்கு மடங்கு விண்ணப்பம் கூடுதலாக குவிகிறது.கடந்தாண்டு, 1,086 இடங்களுக்கு, 5,535 பேர் விண்ணப்பித்தனர். ஆனால், ஓராண்டாக, இக்கல்லுாரிக்கு நிலையான முதல்வர் இல்லை. கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்மலர், கூடுதல் பொறுப்பாக, கல்லுாரி முதல்வர் பதவியையும் கவனித்து வருகிறார்.மேம்பாட்டு பணி பாதிப்புஅரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளதால், மேம்பாட்டு பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. துறைத் தலைவர்களாக உள்ள அனுபவ மிக்க பேராசிரியர்கள் அவர்கள் பாடத்துடன், முதல்வர் பொறுப்பை கூடுதலாக வகிப்பதால், கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகிறது. தவிர, இரு கல்லுாரிகளிலும் ஓராண்டுக்கும் மேலாக நிலையான முதல்வர் இல்லாமல், பொறுப்பிலேயே தொடர்வதால், கல்லுாரிக்கு தேவையான வசதிகளை உடனடியாக கேட்டு, பெற்று, செய்து தர முடியாத சூழல் உருவாகிறது. மே மாதம் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், அட்மிஷன் உள்ளிட்ட பணிகள் உள்ளது. பணி கூடுதல் என்பதால், தாமதமின்றி அரசு கல்லுாரிகளுக்கு முதல்வர் நியமிக்க வேண்டும் என அரசுக் கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.