காஷ்மீரில் இருந்து திரும்பிய மாணவர்கள் போர் பீதி குறித்து அனுபவம் பகிர்வு
பெங்களூரு: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய போது, காஷ்மீரில் சிக்கிய கர்நாடக மாணவர்கள், பெங்களூரு திரும்பினர். எல்லையில் போர் பீதி குறித்து, தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.கர்நாடகாவை சேர்ந்த 13 மாணவர்கள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷேரி இ காஷ்மீரி என்ற விவசாய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்க சென்றனர்.பஹல்காமில் சுற்றுலா பயணியரை, பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவத்துக்கு பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவானது. எனவே கல்லுாரிக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் தாக்குதலால், மாணவர்கள் பீதியில் இருந்தனர். இவர்களை அழைத்து வர, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி ஏற்பாடு செய்தனர்.அவர்களின் உதவியால் மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு திரும்பினர். நேற்று காலையில் ஜெ.பி., நகரில் உள்ள குமாரசாமியின் வீட்டுக்கு சென்று நன்றி கூறினர்.மாணவர்கள் ஹரிஷ், நுாதன் கூறியதாவது:நானும், என் நண்பரும் மூன்று நாட்களுக்கு முன், ஸ்ரீநகரில் இருந்து பஸ்சில் புறப்பட்டு, ஜம்முவை அடைந்தோம். அங்கிருந்து ரயிலில் டில்லிக்கு வந்தோம். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்றிரவு பெங்களூருக்கு வந்தோம்.ஜம்மு - காஷ்மீரில் பிளாக் அவுட் செய்திருந்தனர். இரவு மிகவும் பயமாக இருந்தது. ஒரு சிறிய வெளிச்சமும் இல்லை. நாங்கள் விவசாய பல்கலைக்கழக வளாகத்தை விட்டு, வெளியே செல்லவில்லை. ஆனால் ஆப்பரேஷன் சிந்துார் நடந்த போது, பெரும் வெடிச்சத்தம் கேட்டது. மிகவும் பயந்தோம். உள்ளூர் மாணவர்கள் எங்களை தைரியப்படுத்தினர். நாங்கள் கர்நாடகா திரும்ப, மத்திய, மாநில அரசுகள் உதவின.முதல் செமஸ்டர் முடிந்து, கல்லுாரி துவங்கியுள்ளது. போர் பீதியால் தற்போது கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல், ஆன்லைன் வகுப்பு நடத்துவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.