மத்திய அரசு பணிகளில் சேர ஆர்வம் காட்டுங்கள்: தேர்வாணைய இயக்குநர்
சென்னை: மத்திய அரசு பணிகளில் சேர, தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என மத்திய அரசு தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் ராகுல் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில், தலைமைச் செயலர் உள்ளிட்ட தலைமைப் பதவிகளில், முன்பு தமிழர்கள் அதிகம் இருந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக, தமிழர்களிடம் மத்திய அரசு பணி குறித்த ஆர்வம் குறைந்து உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கூட, மற்ற மாநிலத்தவர் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.வேலைவாய்ப்புதமிழக மாணவர்களிடம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். தற்போது, எஸ்.எஸ்.சி.,ன் அறிவிப்புகளை, அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி வருகிறோம்.மத்திய அரசு பணிக்கான தேர்வுகள் கணினி வழியாக நடக்கும். எதற்கும் நேர்முகத்தேர்வு கிடையாது. தேர்வுக் கட்டணம் 100 ரூபாய் மட்டும்தான். அனைத்து தேர்வுகள் குறித்தும் https://ssc.gov.in/ எனும் இணைய தளத்தில் அறிவிப்புகள் வெளியாகும்.தற்போது பட்டப்படிப்பு முடித்தோர் பங்கேற்கும் வகையில், 14,582 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பிளஸ் 2 படித்தோருக்கு, ஒருங்கிணைந்த மேல்நிலை அளவில், 3,131 பணிகளுக்கான தேர்வுகள், செப்., 8 முதல் 18ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கு, அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு மையங்கள்தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி ஆகிய எட்டு நகரங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். மத்திய அரசு பணிகளில், குரூப் டி பணிக்கு கூட, குறைந்த பட்ச மாத ஊதியமாக, 32,000 ரூபாய் கிடைக்கும். இதுகுறித்த தகவல்களை, https://ssc.gov.in/ இணையதளத்தில் காணலாம்.தமிழக மாணவர்கள், அடிப்படை ஆங்கிலம், பொது அறிவு, கணிதப் பாடங்களை நன்றாக படித்து, தட்டச்சு திறன், கணினியை கையாளும் திறன்களை வளர்த்துக் கொண்டு, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதி, மத்திய அரசு பணிகளில், தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். 10ம் வகுப்பு தகுதியுடைய பணிகளுக்கான தேர்வுகளை, தமிழிலேயே எழுதலாம்.இவ்வாறு அவர் கூறினார்.