சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தின் புதிய முகத்தை உருவாக்கணும்: மத்திய அமைச்சர்
பாலக்காடு: சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தின் புதிய முகத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் நடந்த 7வது பட்டமளிப்பு விழாவில், ஐ.ஐ.டி., ஆளுநர் குழுவின் தலைவர் பேராசிரியர் ரமேஷ் வெங்கடேஸ்வரன், இயக்குனர் பேராசிரியர் சேஷாத்ரி சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில், பி.டெக்., - 151, எம்.டெக்., - 71, எம்.எஸ்.சி., - 55, பி.எச்டி., - 30, இரட்டைப் பட்டம் - 8 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட விகசித் பாரத் - 2047 திட்டத்துக்கு, சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தின் புதிய முகத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும். வெறும் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், புதிய பொருளாதார அமைப்பை வரையறுக்க வேண்டும்.வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோராகவும், தொலைநோக்கு பார்வையாளர்களாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்கக்கூடிய புதுமையாளர்களாகவும், மாணவர்கள் இருக்க வேண்டும்.உலகத்தரம் வாய்ந்த அடிப்படை டிஜிட்டல் வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலத்தை வடிவமைத்து, சமூகத்திற்கான புதிய பரிமாணங்களைக் கண்டறிவதன் வாயிலாக, பாலக்காடு ஐ.ஐ.டி., தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும்.இவ்வாறு, அவர் பேசினார்.