உள்ளூர் செய்திகள்

கலர்புல் கனவு இருக்கலாம்... உணவு கூடாது! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அறிவுறுத்தல்

பண்டிகை காலம் தொடங்கி விட்டது. இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான கேக் விற்கும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வுகள் துவக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது என்றாலும், அத்தகைய கட்டுப்பாட்டை பல நிறுவனத்தினர் பொருட்படுத்துவதில்லை.நாம் அன்றாடும் உட்கொள்ளும் உணவுகள் முதல் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட், கேக், காளான், பானிபூரி போன்ற அனைத்திலும் பல்வேறு செயற்கை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன.சாதாரணமாக பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் ஓர் பொருள் பஞ்சு மிட்டாய். அதை, அரசு தடை செய்யும் வரை, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் 'ரோடமைன்-பி' என்ற செயற்கை நிறமூட்டி கலந்திருந்தது பலருக்கும் தெரியாது.பிறந்த நாளுக்கு கேக் வாங்கும்போது கூட, ரெயின்போ கேக், ரெட் வெல்வெட் கேக் என கலர்புல்லா பார்த்து வாங்குகின்றனர். அவற்றில், அனுமதித்த நிறமிகள் மட்டும் கலக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''செயற்கை நிறமிகளை உணவு பொருட்களில் கலப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. உணவு மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகிறோம். இனிப்பகங்கள், கேக் தயாரிப்பு இடங்கள், பேக்கரிகளில் ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளோம். அதிக வண்ணங்கள் கலந்திருக்கும் உணவுகளை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். நிறமில்லாமல், பளபளவென மின்னாத பொருட்களே உடலுக்கு நல்லது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.வண்ண உணவை தள்ளி வையுங்கஅரசு மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், ''டிவி, மொபைல் போன் போன்றவற்றில் வரும் உணவுகளை குழந்தைகள் அதிகம் விரும்பி கேட்கின்றனர். ஏனெனில், விளம்பரங்களில் பார்க்கும் கலர்புல் நிறங்கள், அவர்களது கண்கள் வழியாக மூளைக்குச் சென்று, அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அனுமதிக்கப்பட்ட நிறமிகளாகவே இருந்தாலும், அனைத்து பொருட்களிலும் கொஞ்சம் கொஞ்சம் என உடலுக்குள் சென்றால், விளைவுகள் என்னவாகும். அதிக பளிச் சென்று, வண்ண மயமாக இருக்கும் உணவுகளை தள்ளி வைப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. செயற்கை நிறமிகள் கலந்த உணவை எடுத்துக் கொண்டால், சிறு வயதிலேயே சர்க்கரை, இதய நோய், புற்றுநோய் என ஆரோக்கியம் பாதிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்