திட்டத்தை நிறைவேற்றினால் நிதி உண்டு: தமிழக அரசுக்கு மத்திய அரசு கறார்
'தமிழக அரசு, மத்திய அரசுக்கு நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. திட்டத்தை நிறைவேற்றினால் நிதி விடுவிக்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.பார்லிமென்டில் நேற்று ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தின்போது, தேசிய கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். அப்போது, தி.மு.க., - எம்.பி., கிரிராஜன் பேசுகையில், ''பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவை நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை மனு அளித்தார்.''சமர சிக் ஷா திட்டத்திற்காக, 2024 - 25 நிதி ஆண்டில் மட்டும் 2,150 கோடி ரூபாய் தர வேண்டி உள்ளது. நிலுவை நிதியை விடுவிக்க வேண்டும். அதற்கான உத்திரவாதத்தை, இந்த சபையில் மத்திய அரசு தர வேண்டும்,'' என்றார்.இதற்கு பதிளித்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: இந்த கேள்விக்கு, திறந்த மனதுடன் பதிலளிக்க விரும்புகிறேன். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் என எந்த மாநிலமாக இருந்தாலும் மத்திய அரசுக்கு ஒன்று தான். சமர சிக் ஷா திட்டத்தை பொறுத்தவரை தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் பாதி தொகை தரப்பட்டு விட்டது. தமிழகத்தில் மட்டும் உங்களின் போராட்டம் தான் என்ன?கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 'தமிழகத்தில் மட்டும், மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் ஏன் அமல்படுத்தப்படுவதில்லை? குறிப்பாக, ஜவஹர், நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஏன் தமிழகத்தில் திறக்கப்படுவதில்லை?' என்று சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. தி.மு.க., கூட்டாளியான காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கொண்டு வரப்பட்டன.அந்த ஆட்சியில் தி.மு.க.,வும் அங்கம் வகித்தது. அப்படியிருந்தும் , தி.மு.க., ஆட்சி செய்யும் தமிழகத்தில் இந்த பள்ளிகள் திறக்கப்படவில்லை. உயர்ந்த தரத்துடன், நவீன வசதிகளுடன் கூடிய நவோதயா பள்ளிகளுக்கு, தமிழகத்தில் அனுமதியில்லை. தரம் வாய்ந்த பள்ளிகளை கொண்ட திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். திட்டத்தில் இந்தளவுக்கு மட்டும் தான் அமல்படுத்த வேண்டும்; இந்த அளவை அமல்படுத்தக் கூடாது என்றெல்லாம், மத்திய அரசுக்கு தமிழக அரசு நிபந்தனைகளை விதிக்கக்கூடாது.இந்த நிதி, தமிழக குழந்தைகளுக்கு சொந்தமான நிதி; இதை விடுவிப்பதில், பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தமிழகத்திற்கு சமர சிக் ஷா திட்ட நிதி விடுவிக்கப்படும். அதற்கு, நீங்கள், நாட்டின் கூட்டாட்சி அமைப்பு முறையை மதிக்க வேண்டும். ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.