பேரார்வத்தை ஊக்குவிக்கும் தினமலர் வழிகாட்டி: தொழில்துறை வல்லுார் மீனாட்சி சுந்தரம் பேச்சு
புதுச்சேரி: 'ஒருவரிடம் உள்ள பேரார்வத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி 'தினமலர்' வழிகாட்டி' என தொழில்துறை வல்லுநர் மீனாட்சி சுந்தரம் பேசினார்.புதுச்சேரியில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கடினமாக உழைக்கும் அனைவருக்கும் வெற்றி உண்டு. நமக்குள்ள ஆர்வத்தையும், நம் குறிக்கோளையும் பார்க்க வேண்டும். குறிக்கோள் சரியாக இருக்க வேண்டும். அதற்கு பேரார்வம் இருக்க வேண்டும். அது தான் நாம் செல்லும் பாதையில் நம்மை வைக்கும்.பேரார்வத்தை ஊக்குவிப்பது இந்த வழிகாட்டி. திறமைக்கும், ஆற்றலுக்கும் உள்ளது சிறிய வித்தியாசம். சரியாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.உங்களது கட் ஆப் மார்க் அடிப்படையில் நான்கு கல்லுாரிகள் கிடைத்தால், அதில் எந்த கல்லுாரியில் என்ன கோர்ஸ் நன்றாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து சேர வேண்டும். ஒருவருக்கு அடிப்படை அறிவுகள் மிக முக்கியம். அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அதற்காக, தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். எந்த கல்லுாரி 'பெட்டர்' என்பதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். திறமையை வைத்து தான் வேலை வழங்குவர். எந்த அளவிற்கு திறமையை வளர்க்கிறோமோ அந்த அளவிற்கு வாழ்க்கையில் வளரலாம்.நீங்கள் படிக்கும் அனைத்து படிப்புகளுக்கும் வேலை கிடைக்கும். இப்போதுள்ள வேலை வாய்ப்புகளைவிட 6 மடங்கு எதிர்காலத்தில் உள்ளது. நாம் ஒழுங்காக படித்து திறமையை வளர்த்தால், நீங்கள் வேலை செய்யும் இடத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும் படிப்புகளை படிக்கலாம். கம்ப்யூட்டர் வந்தால் வேலை போய்விடும் என போராட்டம் நடந்தது. ஆனால், தற்போது கம்ப்யூட்டரால் மட்டுமே வேலை உள்ளது. அதன்பிறகு ஏ.ஐ., வந்துள்ளது.தற்போதுள்ள கம்பெனிகளில் ரோபோ மற்றும் மனிதர்கள் சேர்ந்து வேலை செய்கின்றனர். கல்லுாரியில் இரண்டாவது மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது 'சீரியசாக' படிக்க வேண்டும்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அனுபவத்தை வைத்து ஆட்களை தேர்வு செய்தனர். இப்போது திறமையை வைத்து ஆட்களை தேர்வு செய்கின்றனர். படித்து முடித்து வேலைக்கு வரும் போது அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று சத்தமாக படித்தால் போதும், அது தான் கம்பெனிகளுக்கு வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.