உள்ளூர் செய்திகள்

தினமலர் நடத்திய நீட் மாதிரி தேர்வு: மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

சென்னை: 'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி இணைந்து நடத்திய, 'நீட்' மாதிரி தேர்வில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோருடன் நேற்று பங்கேற்றனர்.பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவ, மாணவியரின் உயரிய கனவுகளில் ஒன்றாக மருத்துவப் படிப்பு உள்ளது. அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, 'நீட்' மாதிரி தேர்வை நேற்று நடத்தின.இதற்காக காலை முதலே மாணவர்கள், பெற்றோருடன் சென்னை அரும்பாக்கம், கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப் பள்ளியில் குவிந்தனர். தேர்வு எழுத, 668 மாணவ, மாணவியர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 400க்கும் மேற்பட்டோர் பெற்றோருடன் வந்திருந்தனர்.ஆதார் அட்டையுடன் வந்த மாணவ, மாணவியரின் பெயர், மொபைல் எண் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டன. மாணவ, மாணவியருக்கு தேர்வு எழுதும் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், 'நீட்' தேர்வு நடைமுறைப்படி, தீவிர சோதனைக்கு பின், தேர்வு அறைக்கு 09:00 மணியளவில் அனுப்பப்பட்டனர்.'வேதாந்து லேர்னிங் சென்டர்' இணைந்து நடத்திய மாதிரி 'நீட்' தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. கேள்வித்தாள், பதில் அளிக்க ஓ.எம்.ஆர்., 'சீட்' மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாதிரி 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது.இதில், மத்திய - மாநில பாடப் பிரிவுகளை உள்ளடக்கி வினாக்கள் இடம் பெற்றிருந்ததுடன், 'நீட்' தேர்வு நடைமுறைகள் 80 சதவீதத்திற்கு மேல், மாதிரி தேர்விலும் பின்பற்றப்பட்டன.தேர்வு வளாகத்தில் மாணவ, மாணவியருக்கு குடிநீர், ஜூஸ், சிற்றுண்டி போன்றவை வழங்கப்பட்டன. மாணவர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொள்ளும் வகையில், அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்பட்டது.'நீட்' மாதிரி தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியரின் வினாத்தாள் திருத்தப்பட்டு, 48 மணி நேரத்தில், அவர்களின் மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவு விபரம் அனுப்பப்படும். அதில், சிறந்த மதிப்பெண் பெறும், முதல் 10 பேருக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.மேலும், 'நீட்' தேர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், பள்ளி வளாக அரங்கில் நடந்தது.இதில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ராஜலட்சுமி கல்வி குழும நிர்வாக இயக்குநர் அபூர்வா ஹரி, 'வேதாந்து லேர்னிங் சென்டர்' முதன்மை ஆசிரியர் யாழினியன், கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்