மதுரை காமராஜ் பல்கலை முறைகேடு விசாரணை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் சில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விசாரிக்க குழு அமைக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.தேனி மாவட்டம் சி.புதுப்பட்டி சண்முகமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை ‛போர்டு ஆப் ஸ்டடீஸ்' பிரிவு கண்காணிப்பாளர் கோமதி. இவர் பல்கலையின் சில உயரதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். நிதி முறைகேடு நடந்துள்ளது. கோமதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலானது. சி.பி.ஐ., விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பல்கலை இணைவிப்பு கட்டணம் உள்ளிட்ட சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணங்கள் வேண்டுமேன்றே திசை திருப்பப்பட்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.கல்லுாரிகளை நிறுவ, அரசிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே, பல்கலையிடம் இணைவிப்பு கோரி விண்ணப்பிக்க முடியும். மதுரை காமராஜ் பல்கலை விதிகளின்படி, கல்லுாரிகளுக்கு இணைவிப்பு அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை சரிபார்க்க ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.கோமதி சில உயரதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதால் அந்நடைமுறை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. முறையாக ஆய்வு செய்யவில்லை. இதனால் சில கல்லுாரிகளின் கல்வித் தரம் பாதித்துள்ளது.பதவியை தவறாக தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர். ஊழல் நடந்துள்ளது. விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் 17ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.