விடுதி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் சம்பத்குமார் உத்தரவு
ரெட்டியார்சத்திரம்: “அரசு விடுதிகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என அமைச்சர் சம்பத்குமார் உத்தரவிட்டார்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கள்ளர் பள்ளி விடுதியில் ஆய்வு நடத்திய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தலைமை ஆசிரியரின் அறையில் பதிவேடுகளை ஆய்வு செய்து, பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.விடுதியில் ஆய்வு நடத்திய போது மாணவர்கள் மட்டும் இன்றி அப்பகுதி மக்களும், 'வார்டன் ஊழியர்கள் சரிவர வருவதில்லை, மது குடித்துவிட்டு மாணவர்களை துன்புறுத்துவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.விடுதி அறையில் கிடந்த காலி பாட்டில்களால் அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இப்பகுதியினர் சமூகநீதி விடுதி என்ற பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முந்தைய 'கள்ளர் பள்ளி, மாணவர் விடுதி' பெயரிலேயே நீடிக்க கோரி மனு அளித்தனர்பின், சின்னாளபட்டி மாணவர் விடுதியில் மாணவர்களுக்காக தயாராகி கொண்டிருந்த சுக்கு மல்லி காபியை குடித்த அமைச்சர், சமையல் பணிகளில் சுகாதாரம் முழுமையாக கடைபிடிக்க ஆலோசனை வழங்கினார். சிக்கனம்பட்டி மாணவியர் விடுதியின் சேதமடைந்த கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பாதுகாக்கப்பட்ட குடிநீர், குளியல் அறை, கழிவறை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தினார். விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கையில், ‛அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் இணை இயக்குனர் சுஹாசினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுகுமார் உடனிருந்தனர்.