உள்ளூர் செய்திகள்

கல்வி கட்டண விபரங்களை வெளியிடுவதில் என்ன சிரமம்?: பள்ளிகளுக்கு கோர்ட் கேள்வி

சென்னை: கல்வி கட்டணங்களை பள்ளி அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என, மாநில தகவல் ஆணையம், தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விபரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு, தமிழக மாநில தகவல் ஆணையம், மே 25ம் தேதி உத்தரவிட்டது.அதன்படி, ஜூன் 5ம் தேதிக்குள் கட்டண விபரங்களை, விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பிற வாரிய பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் துறை இயக்குநர் ஜூன் 1ம் தேதி சுற்றறிக்கை அனுப்பினார்.இந்நிலையில், மாநில தகவல் ஆணைய உத்தரவு, தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுச்செயலர் கே.பழனியப்பன் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு, நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பள்ளிகள் தங்கள் கட்டண விபரங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில், என்ன சிரமம் இருக்கிறது' என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்