பிரான்ஸ் அரசின் சமாதான திட்டங்கள் நிராகரிப்பு; போராட்டங்களை தொடர மாணவர்கள் முடிவு
பாரிஸ்: பிரான்ஸ் அரசு முன்வைத்த கல்வி திட்டத்தை நிராகரித்ததுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னேடுக்கப் போவதாக மாணவர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரான்சில், பள்ளிகளில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, அதிகப்படியான மாணவர் சேர்க்கை, பாடச்சுமை மற்றும் தேர்வு முறைகள், கல்வி கட்டண உயர்வு, கல்விக்காக அரசு வழங்கும் நிதி குறைப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் பாரிசின் புறநகர் பகுதியான கிரெட்டீல் மற்றும் செயின்ட் டெனி ஆகிய பகுதிகளில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் தொடங்கிய இப்போராட்டம், நாடு முழுதும் விரிவடைந்தது தற்போது பெரும் போராட்டமாக மாறியுள்ளது.போராட்டங்கள், பேரணிகள், பள்ளிகள் முற்றுகை, போலீசாருடன் மோதல் உள்ளிட்டவை பல வாரங்களாக தொடர்கிறது. சமீபத்தில் பல இடங்களில் வன்முறையாக மாறியது.இதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பிரான்ஸ் அரசு, மாணவர் அமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியது. மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கும் வகையில் ஒரு முன்மொழிவு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.அரசு அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின் வெளியே வந்த மாணவர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ப அரசின் முன்மொழிவுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்தனர். மேலும், போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.