உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ., மூலம் மின்னஞ்சல் அனுப்பினால் படிக்க மாட்டேன்; கோ டாடி சி.இ.ஓ.,

நியூயார்க்: “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எழுதப்பட்ட ஆவணங்களை நான் ஒருபோதும் படிக்க மாட்டேன்,” என முன்னணி இணையதள சேவை நிறுவனமான 'கோ டாடி' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அமன் பூடானி ஊழியர்களுக்குக் கறாராக உத்தரவிட்டுள்ளார்.அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு மின்னஞ்சல் வழியாக வரும் ஆவணங்களில், ஏதேனும் ஒன்று 'ஏ.ஐ.,' மூலம் எழுதப்பட்டது எனத் தெரிந்தால், அதை நான் உடனடியாக நிராகரித்து விடுவேன்; படிக்கவே மாட்டேன். தங்களுடைய எண்ணங்களைச் சொந்தமாக எழுதக் கூட நேரம் ஒதுக்காத ஒருவருக்காக, அதை வாசிக்க நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.அலுவலகத்தில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு முழுமையான தடை விதிக்கவில்லை. புதிய வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களைப் புரிந்து கொள்ளவும், தகவல்களை ஆராயவும் தொழில்நுட்பத்தின் உதவியை நாடலாம். ஆனால், ஒரு யோசனையை ஆவணமாக மாற்றும் போது அதை ஊழியர்கள் சொந்த சிந்தனையோடு தங்கள் வார்த்தைகளிலேயே எழுத வேண்டும்.எப்படி கண்டுபிடிப்பது?ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். எந்த ஒரு விஷயத்தையும் சுருக்கமாகவும், நச்சென்றும் சொல்லாமல் பக்கம்பக்கமாக வளவளவென இழுப்பது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஊழியர்கள் கூட, திடீரென அதீத இலக்கண நேர்த்தியோடு எழுதும் போது சந்தேகம் எழுவது இயல்பு.மனித சிந்தனைக்கு இணையேதுஇணையத்தில் ஏற்கனவே இருக்கும் தகவல்களை மட்டுமே ஏ.ஐ., அள்ளித் தரும். ஆனால் மனித மனங்களின் ஆழத்தில் தோன்றும் புதுமையான சிந்தனைகளும், யோசனைகளும் இணையத்தில் இருக்காது. எழுதுவது என்பது வெறுமனே வரிகளை அடுக்குவது அல்ல; அது ஒரு யோசனையைச் செதுக்கிச் செம்மைப்படுத்தும் கலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்