மாநில மருத்துவ கவுன்சில் பதிவில் தாமதம்: வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் சிரமம்
மதுரை: வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., படித்த மாணவர்கள் மத்திய அரசின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (எப்.எம்.ஜி.இ.,) தேர்ச்சி பெற்றும் தமிழகத்தில் பயிற்சியை (இன்டர்ன்ஷிப்) தொடங்க முடியாமல் தவிக்கின்றனர்.தேசிய மருத்துவ ஆணையத்தால் (என்.எம்.சி.,) ஆண்டுக்கு இருமுறை எப்.எம்.ஜி.இ., தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கு முன் மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்த்து உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்.எம்.சி., தற்காலிக பதிவுச் சான்றிதழ் வழங்கி, சொந்த மாநிலங்களில் கட்டாய சுழற்சி மருத்துவ பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்துகிறது. வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., முடித்திருந்தாலும் இந்தியாவில் டாக்டராக பணியாற்ற, நிரந்தரப் பதிவு பெற கட்டாயம் இந்த பயிற்சி பெற வேண்டும்.கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட், டில்லி, மகாராஷ்டிராவில் என்.எம்.சி., ஒப்புதல் பெற்ற உடனேயே மாணவர்கள் மருத்துவப் பயிற்சியைத் தொடங்குகின்றனர்.தமிழகத்தில் மட்டும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் இன்னும் மாநில கவுன்சில் பதிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிர்வாக தாமதத்தால் எம்.பி.பி.எஸ்., முடித்த டாக்டர்கள் மருத்துவப் பயிற்சி பெற முடியாமல் பல மாதங்களாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.தமிழக சுகாதாரத் துறையும் முதல்வர் விஜயும் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பதிவு செயல்முறையை விரைவுபடுத்தி, தெளிவான கால அட்டவணையை வெளியிட உத்தரவிட வேண்டும்.