கல்லூரிக்கே வராமல் அதிக மார்க் எடுத்த மாணவர் - விசாரணை
கல்லூரிக்கே வராத என்ஜினியரிங் மாணவர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் ஏழு பேரிடம், அண்ணா பல்கலை உண்மை கண்டறியும் குழு 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. திருவண்ணாமலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், ஒரு மாணவர் கல்லூரிக்கே வராமல் தேர்வெழுதி அதிக மதிப்பெண் பெற்றதில் சந்தேகம் உள்ளதாக, அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு புகார் வந்தது. அருண்குமார் ரெட்டி என்ற அந்த மாணவர் கல்லூரி நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அந்த மாணவர் கல்லூரிக்கு வந்ததை யாரும் பார்க்கவில்லை. அவர் யாரென்றே தெரியாத நிலையில், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி? என கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி முடிவெடுக்க, உண்மை கண்டறியும் குழுவை அண்ணா பல்கலை அமைத்துள்ளது. இக்குழுவினர் நேற்று விசாரணையை துவங்கினர். புகார் கூறப்பட்ட கல்லூரியைச் சேர்ந்த ஏழு பேராசிரியர்களிடம், அண்ணா பல்கலை குழுவினர் நேற்று காலை 10 மணி முதல் மாலை 7.45 மணி வரை அண்ணா பல்கலை வளாகத்தில் விசாரணை நடத்தினர். மாணவரின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டது. தேர்வுத்தாள்களின் கையெழுத்துகள் மாறியுள்ளது குறித்து விசாரிக்கப்பட்டது. மீண்டும் வரும் புதன் கிழமை விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன் பின், உண்மை கண்டறியும் குழு, அண்ணா பல்கலை துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். இதன் அடிப்படையில், மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படுமா? கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகுமா? அல்லது தேர்வு அங்கீகரிக்கப்படுமா என்பது குறித்து பல்கலை முடிவெடுக்கும்.