உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ.,- எம்.சி.ஏ., நுழைவுத்தேர்வு: தன்னாட்சி கல்லூரி மாணவர் தவிப்பு

அண்ணா பல்கலை, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான, பொது நுழைவுத் தேர்வை, நாளையும், நாளை மறுநாளும் நடத்துகிறது. நாளை, 6ம் தேதி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, எம்.பி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வும்; பிற்பகல், 2:30 முதல், 4:30 வரை, எம்.சி.ஏ.,வுக்கான நுழைவுத் தேர்வும் நடக்கின்றன. வரும், 7ம் தேதி, எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை, ஒரு லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு, நாளை காலை நடக்கிறது. இந்த மாணவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரி தேர்வும், நுழைவுத் தேர்வும், நாளை காலை நடப்பதால், நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு, தன்னாட்சி கல்லூரி மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த பிரச்னை குறித்து, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, நேற்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். ஆனால், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், "முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்து, தேர்வை நடத்த தயாராக உள்ளோம். இந்நேரத்தில், எங்களுடைய நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க முடியாது. சம்பந்தபட்ட கல்லூரிகள், அவர்களுடைய தேர்வை, வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்" என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்