உள்ளூர் செய்திகள்

காட்டு யானைகள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலி

திருவண்ணாமலை அடுத்த, ஜவ்வாதுமலையில் இருந்து வந்த, ஆறு காட்டு யானைகள், கடந்த, 27ம் தேதி முதல், ராமநாயக்கன்பாளையம் பகுதியில் முகாமிட்டு இருந்தன. நேற்று முன்தினம் காலை, ஊத்துமேடு வனப்பகுதிக்கு சென்ற யானைகள், மாலை, 5:00 மணியளவில் வெளியேறின. அப்பகுதி மக்கள், தீப்பந்தம், பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியதால், வனப்பகுதிக்குள் சென்ற யானைகள், இரவு, 8:00 மணியளவில், கல்பகனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சிவகாங்காபுரம் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது சிலர், பட்டாசுகளையும், நெருப்புடன் இருந்த தென்னை மட்டைகளையும், யானைகள் மீது வீசினர். அதனால், நான்கு யானைகள் ஒன்று சேர்ந்த நிலையில், இரண்டு யானைகள் பாக்கு தோப்புக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள், தீப்பந்தங்களை கொளுத்தி, யானை மீது வீசியதில் ஆக்ரோஷமடைந்த இரண்டு யானைகள், பொதுமக்களை விரட்டின. யானைகளிடம் இருந்து தப்பி ஓடிய, சதீஸ் குமார், 16, என்பவர், விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். அவர், கல்பகனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கல்பகனூர் வி.ஏ.ஓ., புகார் செய்ததை அடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர். "காட்டு யானைகள் ஆக்ரோஷமடைந்துள்ளதால், அவற்றை யாரும் விரட்ட வேண்டாம். யானைகள் மீது பட்டாசு போடுதல், கற்களை வீசுதல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் தான், வனப்பகுதிக்கு பாதுகாப்பாக விரட்ட முடியும்" என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்