உள்ளூர் செய்திகள்

மதுக்கடைக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் லாரியை சிறை பிடித்த பள்ளி மாணவர்கள்

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே கல்லூரி சாலையில், டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, "சரக்கு" ஏற்றி வந்த லாரியை, பள்ளி மாணவர்கள் சிறை பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தில், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், கோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் அமைக்க, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் இயங்கிய மதுக்கடை, காரைக்குடி ரயில்வே- கல்லூரி சாலைக்கு மாற்றப்பட இருந்தது. நேற்று, கடை மேற்பார்வையாளர் ஜாகீர் உசேன் மற்றும் விற்பனையாளர்கள், "சரக்கு", தளவாட பொருட்களை லாரியில் ஏற்றி வந்தனர். மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள், சதானந்த சன்மார்க்க நிலைய துவக்க பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். லாரியை சிறைபிடித்த மாணவர்கள், கோஷம் எழுப்பினர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள், லாரியுடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து, தலைமை ஆசிரியர் திலகம் கூறுகையில், "எங்கள் பள்ளியில், கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகள்தான் படிக்கின்றனர். மதுக்கடை திறந்தால், பெண்கள் நடக்க முடியாத நிலை ஏற்படும்," என்றார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கோபிநாத் கூறுகையில், "அங்கு மதுக்கடை திறக்கப்படாது. வேறு இடம் பார்த்து வருகிறோம்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்