இடைநின்ற மாணவிக்கு சான்றிதழ் நிறுத்தம்: நஷ்டஈடு வழங்க கல்லூரிக்கு உத்தரவு
சென்னை: வகுப்பை விட்டு விலகிய மாணவிக்கு, கல்விக் கட்டணத்தை திருப்பித் தர மறுத்த கல்லூரி, 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, சென்னை, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. காரைக்குடியில், மத்திய அரசு நிறுவனத்தில், விஞ்ஞானியாக பணியாற்றுபவர், கே.எல்.என்.பனி; இவரது மகள் நிதியுஷா. சென்னையில் உள்ள, எம்.ஓ.பி., வைஷ்ணவ மகளிர் கல்லூரியில், "மீடியா" நிர்வாகத்தில், முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்த்தார். கல்வி கட்டணமாக 29,400 ரூபாய் செலுத்தினார். ஒன்பது நாட்கள் மட்டுமே, கல்லூரிக்கு சென்றார். உடல் நலம் சரியில்லாததால், வகுப்புக்கு செல்ல முடியவில்லை; கல்லூரியை விட்டு விலகினார். கல்லூரி முதல்வருக்கும் தகவல் தெரிவித்தார். சான்றிதழ்களையும், கல்வி கட்டணத்தையும் திருப்பித் தருமாறு கேட்டார். கடிதம், இ-மெயில், தொலைபேசி மூலம் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து, திருச்சியில் உள்ள, உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு, கல்லூரிக்கு பதிவு தபால் அனுப்பியது. எந்த பதிலும் இல்லை. அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் கோர்ட்டில், பனி சார்பில், உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு, புகார் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர் தயாளன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: "கல்லூரியில் சேர்ந்த, குறைவான நாட்களிலேயே, மருத்துவ காரணங்களுக்காக வகுப்பை தொடரவில்லை. காத்திருப்போர் பட்டியலை, கல்லூரி தரப்பில் வைத்திருந்தால், அதில் இருந்து காலியிடத்தை நிரப்பியிருக்க முடியும். அப்படி ஒரு நிலையை, கல்லூரி தரப்பில் எடுக்கவில்லை. மேலும், 2 ஆண்டுகளாக சான்றிதழை கல்லூரி வைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், மாணவியின் எதிர்காலத்தில், கல்லூரி விளையாடி உள்ளது. இதனால், மாணவிக்கும், அவரது தந்தைக்கும், மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். எனவே, கல்வி கட்டணம் 28,430 ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். நஷ்டஈடாக, 20 ஆயிரம் ரூபாய், வழக்குச் செலவுத் தொகையாக 2,000 ரூபாயை, 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்." இவ்வாறு, அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.