கடல்சார் வணிக வரலாற்று கருத்தரங்கு: பல நாட்டு ஆய்வாளர்கள் பங்கேற்பு
தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகள் மூலம், இந்துமாக் கடலில் பண்டைக் காலத்தில் நடந்த கடல்சார் வணிகம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 19ம் தேதி வரை, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி, பல்கலைக்கழக வரலாற்றுத் துறை, திருவனந்தபுரம், கேரள வரலாற்று ஆய்வுக் கழகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து, பிரிட்டிஷ் அகடமி நிதி உதவியுடன், கருத்தரங்கு நடத்தப்படுகிறது. பிரிட்டிஷ் அருங்காட்சியக பொறுப்பாளர், ரோபர்டா தாம்பர், கருத்தரங்கை துவக்கி வைத்தார். கேரள வரலாற்று ஆய்வுக் கழக இயக்குனர், பி.ஜெ.செரியன், தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம், இந்துமாக் கடலில், தொடக்க கால, கடல்சார் வணிகம் தொடர்பாக விரிவாக பேசினார். புதுச்சேரி, பல்கலை வரலாற்றுத் துறை பேராசிரியர், ராஜன் வரவேற்றார். சார்லீணியர், பெரில், பளிங்கு போன்ற மணிகளால் உருவாக்கப்பட்ட கல் மணிகளும், தங்கம், தந்தம், கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, ஆபரணப் பொருட்களும், இந்துமாக் கடலை ஒட்டியுள்ள நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட, ஆம்பேரா, அரிட்டையன் போன்ற மண்பாண்டங்கள் குறித்தும், இந்த கருத்தரங்கில் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி முத்திரை நாணயங்கள், ரோம நாணயங்கள் என, உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளை எடுத்துரைக்கும் பொருட்கள், தமிழகத்தின் அரிக்கமேடு, கொற்கை, முசிறி உள்ளிட்ட பல்வேறு பண்டைய துறைமுகங்கள் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள், பண்டைய கடல்சார் வணிகத்தில் பயன்பட்ட விதம் குறித்தும், ஆய்வாளர்கள் விவாதிக்கின்றனர். இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மன், இலங்கை உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.