காலத்துக்கு ஏற்ப மக்களுக்கு பயனளிக்க நூல்கள், படைப்புகள் தோன்ற வேண்டும்
தஞ்சாவூர்: "இலக்கிய நூல் படைப்புகள் ஒவ்வொன்றும் காலத்துக்கு ஏற்ப மக்களுக்கு பயன்தரத்தக்க வடிவில் உருவாக்கப்பட வேண்டும். புதிய தொழில்நுட்ப கருவிகள் கண்டுபிடிப்பின் மூலம் தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி உலகம் முழுவும் பரவ வாய்ப்பு ஏற்படுத்த முடியும்," என, தஞ்சை தமிழ்ப்பல்கலை துணைவேந்தர் திருமலை பேசினார். தஞ்சையில், தமிழ்ப்பல்கலையில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி சார்பில், பேராசிரியர் அகத்தியலிங்கனார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு, கணினி மொழியியலும், தமிழும் என்னும் தலைப்பில் நடந்தது. இதில், துணைவேந்தர் திருமலை தலைமை வகித்து பேசியதாவது: "காலத்துக்கு ஏற்ப, புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, புதிய புதிய தொழில்நுட்ப கருவிகளை விஞ்ஞானிகள் கண்டறிவதால் தமிழ்ப்பண்பாடு, தமிழ்மொழி ஆகியன உலகம் முழுவதும் பரவ வழியேற்படும். தமிழ்ப்பல்கலையின் சங்க இலக்கிய மொழிக்களஞ்சியம் போல, பிற இலக்கியங்களிலும் மொழி களஞ்சியம் வெளியிடலாம். வெளியிடும் நூல் படைப்புகள் ஒவ்வொன்றும் பயன்தரத்தக்க வடிவத்தில், முறையில் அமைந்திருக்க வேண்டும். ஒரு இனத்தின் மொழி, பண்பாடு முதலியவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி வாயிலாக மட்டுமே மென்மேலும் வளர செய்ய முடியும். தமிழ்ப்பல்கலை., துவங்கப்பட்டு 32 வருடங்கள் ஆகி விட்டன. இதையொட்டி தமிழ்ப்பல்கலை வாயிலாக அகராதி ஒன்றை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி 2014ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்." இவ்வாறு, அவர் பேசினார். இதில், சென்னை பல்கலை மொழியியல்துறை முன்னாள் தலைவர் தெய்வசுந்தரம், கணினி மொழியியலும், தமிழும் தலைப்பில் பேசினார்.