கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை அவசியம்
கோவை: கோவை நகரில், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, ஆசாமியை கைது செய்தனர். இதன் மூலம், போதை கும்பலிடம் கல்லூரி மாணவர்கள் பலரும் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. போதைப் பொருளான கஞ்சா, கோவையில் கல்லூரி மாணவர்கள் கூடும் இடங்களில், தொடர்ந்து விற்பனையாகி வருகிறது. போலீசார், அவ்வப்போது கஞ்சா வியாபாரிகளை பிடித்து சிறையில் அடைத்தபோதிலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமுள்ள கோவை மாவட்டத்துக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், ரெகுலராக கஞ்சா சப்ளை செய்யப்படுவது தான், இதற்கு முக்கிய காரணம். ஆந்திரா, கேரளாவில் இருந்தும், தமிழகத்தில் தேனி, கம்பம், ஈரோடு பகுதிகளில் இருந்தும், கோவைக்கு கஞ்சா கடத்தி வரப்படுகிறது. மலர் மாலை தொடுப்பதற்காக பயன்படுத்தும் துளசிச்செடி மூட்டைகளுக்குள் பதுக்கி வைத்து, லாரிகள், ரயில்களில் கஞ்சாவை கொண்டு வந்து விடுகின்றனர். அதை வாங்கும் மொத்த வியாபாரிகள், பீளமேடு, உக்கடம், வெரைட்டி ஹால் ரோடு, லாலி ரோடு, போத்தனூர், செல்வபுரம், துடியலூர், கணுவாய் பகுதிகளுக்கு கிலோ கணக்கில் பிரித்து அனுப்பி வைக்கின்றனர். சிறு வியாபாரிகள், பொட்டலங்களாக கட்டி, பஸ் ஸ்டாண்ட், கல்லூரிகள், மாணவர் விடுதி என இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்கின்றனர். கோவை, பீளமேடு, அவினாசி ரோடு, நவ இந்தியா அருகில், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, ஒன்றே கால் கிலோ கஞ்சா வைத்திருந்த, சதீஷ் என்ற வாலிபரை எஸ்.ஐ., ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அதேவேளையில், கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்வது என்பது, பல போலீஸ் ஸ்டேஷன்களில் மாதாந்திர சடங்காக மாறி விட்டது. அதுவும், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக, 50 கிராம், 100 கிராம் கஞ்சா மட்டுமே பறிமுதல் ஆகிறது. தற்போது, பீளமேட்டில் ஒரு கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கும்பலால், கல்லூரி மாணவர்கள் பலர், வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். துவக்கத்தில் விளையாட்டாய், கஞ்சா புகைக்கத் துவங்கும் மாணவர்கள், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். படிப்பை பாழாக்கி, எதிர்காலத்தை வீணாக்குவதுடன், தங்களை நம்பியுள்ள பெற்றோரையும் பரிதவிக்க விடுகின்றனர். இத்தகைய கொடுமைக்கு காரணமான கஞ்சாவை ஒழிக்க, கோவை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.