மருத்துவக் கல்லூரி வளாகம் பார் ஆகிறதா? தடுப்பதற்கு மாணவர் குழு
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், ஆங்காங்கே குப்பைகளின் நடுவில், மது பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. இதை பார்க்கும் மாணவர்களுக்கு போதை ஆசை தூண்ட வழிவகுக்கிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் போதிய பராமரிப்பின்றி, ஆங்காங்கே புதர் மண்டி கிடக்கின்றன. எந்நேரமும் ஆட்கள் வந்து செல்லும் வளாகத்தில், இரவு நேர தள்ளாட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள் கடந்து செல்லும் பாதையில், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கூடைபந்து மைதானத்தை ஒட்டிய சிறுஅரங்கு போன்ற மேடைப் பகுதியின் கீழே, உடைந்தும், உடையாத பாட்டில்கள் கிடக்கின்றன. இங்கு உட்கார்ந்துதான் மாணவிகள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். இரவு நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே வந்து குடித்துவிட்டு செல்கின்றனரா, இங்குள்ளவர்களே இச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என தெரியவில்லை. நடந்து செல்லும் பாதையிலேயே 50க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கிடக்கின்றன என்றால், இன்னும் புதர் பகுதிகளில் எவ்வளவு பாட்டில்கள் குவிந்திருக்கும் என தெரியவில்லை. டீன் மோகன் கூறியதாவது: கல்லூரியில் இரண்டு சார்ஜன்ட், மாணவிகள் விடுதிக்கு ஒரு சார்ஜன்ட், மூன்று வாட்ச்மேன்களை நியமித்து கண்காணிக்கிறோம். இவர்களைத் தாண்டி, மதுபாட்டில்கள் எப்படி வந்ததென விசாரணை செய்வோம். இதற்கென மாணவர்கள் குழுவை நியமிக்க உள்ளேன். தவறு செய்தவர்களை, போலீசில் பிடித்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன், என்றார்.===