உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் நடந்த விளையாட்டு போட்டி: மாணவர்கள் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அடிப்படை வசதி, போதிய பாதுகாப்பு ஏற்பாடு இன்றி நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்படும் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி சிவகங்கையில் நடந்தது. நேற்று முன்தினம் மாணவிகளுக்கும், நேற்று மாணவர்களுக்கும் நடந்த பல்வேறு போட்டிகளில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 6 முதல் 8, 9,10,11,12ம் வகுப்புகளுக்கென மூன்று பிரிவாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இரு நாட்களும் போட்டியாளர்களுக்கு தேவையான குடிநீர், முதலுதவி சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் போன்ற அடிப்படை வசதிகள் எதையும் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், (கம்பு) ஊன்றி தாண்டுதல் உள்ளிட்ட ஆபத்தான போட்டிகளுக்கு, மெத்தை விரித்தல், மணல் குவியலை ஏற்படுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கை எதுவுமில்லாமல் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதனால் உயரம் தாண்டுதலில் பங்கேற்ற சிலர் காயம் அடைந்தனர். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பூவேந்தன் கூறுகையில், "உயரம், நீளம் தாண்டுதல் போட்டிகளுக்கு முன்னேற்பாடாக பஞ்சு மெத்தை போன்ற விரிப்பு விரிக்கப்படும். சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் மெத்தை விரிப்பு இன்றி, மணல் குவியல் ஏற்பாடு செய்திருந்தோம். அடிப்படை வசதிகள் ஓரளவிற்கு செய்யப்பட்டிருந்தன. இனிமேல் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் போட்டிகளுக்கு புகார் எழாத வகையில் தேவையான ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்