சிறு சிறு நுணுக்கங்களை கடைபிடித்தால் வெற்றி உறுதி: பாரதி பாஸ்கர்
மெட்ரிகுலேஷன் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நவ. 30ம் தேதி நடந்தது. பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர், மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய அறிவுரை வருமாறு: மாணவர்களின் கல்வித் திறன் வளர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தினமலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும் மாணவர்கள், தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற்று தொடர்ந்து ஜெயித்துக்காட்டி வருகின்றனர். நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆண்கள் தான் கல்வியை கற்று வந்தனர். எனது பாட்டி மூன்று நாட்கள் தான் பள்ளி சென்றுள்ளார். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற நிலை மாறி, கடந்த மூன்று தலைமுறையாகத் தான் பெண்கள் படித்து வருகின்றனர். என்ன தான் படித்தாலும், தேர்வு அறையில் அமரும்போது ஒருவித பதட்டம் ஏற்படும். இதனால், படித்ததை கூட தேர்வில் எழுத ஞாபகம் வராமல் போய் விடும். பதட்டத்தை துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் தினமலர் இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை உங்களுக்காக நடத்தி வருகிறது. நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரும் போது தெம்பும், தைரியமும் வரும். வழக்கமான சூழ்நிலைகளில் நமது அறிவு சுருங்கி விடும். ஒரே இடத்தில், பாடம் படிப்பதில் சோர்வு ஏற்படும். சோர்வை எளிதாக்க இது போன்ற ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி உதவியாக அமையும். தேர்வில் எளிதாக மதிப்பெண்கள் வாங்க இதில் நிறைய ‘டிப்ஸ்’கள் வழங்கப்படுகிறது. தேர்வு எழுதுவதற்கு முன் திட்டமிட்ட அணுகுமுறை அவசியம். தேர்வு நெருங்கும் நேரத்தில், கூட்டாக படிப்பதை தவிர்க்கவும். கூட்டாக படித்தால் கவனம் சிதறும், நேரம் வீணாகும். தனியாக படிக்கும் போது தெரியாதது ஏதும் இருந்தால் மட்டுமே மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்க்க வேண்டும். கடைசி நேர படிப்பு எந்த வகையிலும் உதவாது. தேர்வு நெருங்கும் நேரத்தில் நண்பர்களோடு பொழுது போக்குவது, உறவினர்களோடு பொழுது போக்குவது தேவையில்லை. கவனம் முழுவதும் பாடங்களின் மீது இருக்க வேண்டும். படிப்பு விஷயத்தில் நம் பலம் எது, பலகீனம் எதுவென ஒரு தாளில் எழுதி வைத்து, பலத்தை கூட்ட என்ன செய்ய வேண்டும், பலகீனத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். தேர்வு எழுதும் போது நேர கணக்கீடு அவசியம். ஒவ்வொரு வினாவுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கினால் முழுவதுமாக எழுதி முடிக்க முடியும் என, முன்கூட்டியே திட்டமிட வேண்டும். ஒரே வினாவை அதிக நேரம் எழுதி நேரத்தை வீணடிக்க கூடாது. தேர்வுக்கு இப்படி சின்ன சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தாலே வெற்றியை எளிதாக பெற்று விடலாம். பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியம். 70, 80 வருட வாழ்க்கைக்கு நாம் அடித்தளத்தை நிர்ணயிக்க வேண்டிய காலமும் இதுதான். நீங்கள் தேர்வில் அதிக மார்க் வாங்கி விட்டால், பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கும். உறவுக்காரர்களுக்கு பொறாமையாகக் கூட இருக்கும். முழு மனசோடு சந்தோஷப்படுபவர்கள் யாரென்று பார்த்தால் உங்கள் பெற்றோரும், உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களாகவும் தானிருப்பர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை நல்ல படியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும். பிள்ளைகள் தேர்வுகளில் நல்ல மார்க் வாங்க வேண்டும். தங்கள் பிள்ளை நல்ல மார்க் வாங்கியிருப்பதாக பெற்றோர்கள் சொல்லி பெருமைப்பட வேண்டும். அது தான் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு செய்யும் நன்றிக் கடன். அப்துல் கலாம் குடும்ப சூழல் காரணமாக, அதிகாலையில் செய்தித் தாள்களை வீடு வீடாக போட்டு வருவாயை ஈட்டினார். தற்போது இவரது பெயர் ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் வருவதை நாம் பார்க்கிறோம். அப்துல் கலாம் நம் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இவரை உதாரணமாக எடுத்துக் கொண்டு, நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். இவ்வாறு பாரதிபாஸ்கர் கூறினார்.