அறிவியல் கண்காட்சி: அற்புத படைப்புகளுடன் மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
தூத்துக்குடி: இன்னும் 15, 20 ஆண்டுகளில் இயற்பியல், வேதியல் கற்றுக் கொடுப்பதற்கு அறிவியல் ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகமாக ஏற்படுத்தி அவர்களே பல படைப்புகளை உருவாக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான மெகா அறிவியல் கண்காட்சி நேற்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் இதுபோன்ற அறிவியல் கண்காட்சி நடத்த இம் மாவட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அரசு அனுமதியளித்திருந்தது. இதன்படி மொத்தம் 82 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இரண்டு பேர் வீதம், அவர்களுக்கு துணையாக ஒரு ஆசிரியர் வீதம் கண்காட்சியில் பங்கேற்று தங்களது அறிவியல் படைப்புகளை இடம் பெறச் செய்தனர். அறிவியல் கண்காட்சி துவக்க விழா சுப்பையா வித்யாலயம் பள்ளி கலையரங்கில் சி.இ.ஓ முனுசாமி தலைமையில் நடந்தது. கண்காட்சியை துவக்கி வைத்த முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி பேசியதாவது; "அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி பருவத்திலே மாணவ, மாணவிகள் ஆர்வமாக இருக்க வேண்டும். ஒரு கண்டுபிடிப்பில் தோல்வி ஏற்பட்டவுடன் அதனை விட்டு விடக் கூடாது. இன்றைக்கு மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இயங்க முடியாது. விஞ்ஞானிகள் குறைவு, அறிவியல் ஆர்வம் குறைவு போன்ற சூழ்நிலையால் தான் மத்திய, மாநில அரசுகள் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற கண்காட்சி மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள் மாணவ, மாணவிகளுக்கு வளர உதவி செய்கிறது. இன்னும் 15, 20 ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல் கற்றுக் கொடுக்க அறிவியல் ஆசிரியர்களே இருக்கமாட்டார்கள் போலும். மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் சின்ன, சின்ன கண்டுபிடிப்புகளை உருவாக்கி அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். நாட்டில் விஞ்ஞானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை நாம் தான் சரி செய்ய வேண்டும். அதற்கு அறிவியல் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை வளர்க்க வேண்டும்." இவ்வாறு முனுசாமி பேசினார். கண்காட்சியில் இடம் பெற்ற அறிவியல் படைப்புகளில் சிறைந்த படைப்புகளை நடுவர் குழு தேர்வு செய்து, முதல் பத்து மாணவர்களுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் அனைவருக்கும் இடை நிலைக்கல்வி திட்டம் மூலம் பரிசு வழங்கப்பட்டது.