ஐ.ஏ.எஸ்., நான்கு முறைக்கு மேல் எழுத அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
ஐந்தாவது முறையாக வெற்றிகரமாக எழுதிய தேர்வை அங்கீகரிக்கக் கோரி பிரவீன் சர்மா என்ற மாணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த, டில்லி உயர்நீதிமன்றம், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பும் பொதுப் பிரிவு மாணவரை நான்கு முறைக்கு மேல் தேர்வு எழுத அனுமதிக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொதுப் பிரிவு மாணவர் சிவில் சர்வீஸ் தேர்வை நான்கு முறைக்கு மேல் எழுத மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறை அனுமதிக்கவில்லை. விபத்து ஏற்பட்டதால் நான்காவது முறை தேர்வில் சர்மா தேர்ச்சி அடைய முடியவில்லை. ஆனால் 2006ம் ஆண்டில் ஐந்தாவது முறையாக மெயின் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்விலும் தகுதி பெற்றார். இந்நிலையில் இத்தேர்வை செல்லுபடியானதாக அறிவிக்கக் கோரி, சர்மா தாக்கல் செய்த மனு டில்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விபத்தினால் மனுதாரருக்கு கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், இவருக்காக விதிமுறைகளை தளர்த்தி உத்தரவிடமுடியாது. இதற்கு அனுமதி அளித்தால் நிலைமை சிக்கலாகும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்ற பெஞ்ச், சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது.