உள்ளூர் செய்திகள்

குஜராத்தில் மூன்றில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி இல்லை!

நாட்டில் உள்ள அனுமதி பெறாத தொழில்சார்ந்த உயர் கல்வி அளிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) வெளியிட்டது. இவற்றில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் கவுன்சில் எச்சரித்தது. இப்பட்டியலின்படி, மேலாண்மை, இன்ஜினியரிங், பார்மசி போன்ற பல்வேறு படிப்புகளில் நாடு முழுவதிலும் 117 கல்வி நிறுவனங்கள் கவுன்சிலின் அனுமதி பெறவில்லை. குஜராத்தை பொறுத்தவரை, மாநிலத்தில் மொத்தம் உள்ள கல்வி நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெறாதவை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுபோன்று பலமுறை பட்டியல் அனுப்பியும் மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை‘ என்று குற்றம்சாட்டியுள்ளார். ‘குஜராத் அரசுக்கும், அதன் கல்வித் துறைக்கும் இது தலைகுனிவை ஏற்படுத்தும் விஷயம். அனுமதி பெறாத கல்விநிறுவனங்களை கவனிக்க மாநில அரசு தவறி விட்டது. சேரும் முன்பு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்ற கல்வி நிறுவனம் தானா என்பதை ஆராய வேண்டியது மாணவர் மற்றும் பெற்றோரது கடமையும் கூட‘ என்று குஜராத் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்