உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் புதிய தொழில் துவங்க கடனுதவி

திருச்சி: பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், புதிதாக தொடங்கவுள்ள உற்பத்தி தொழில்களுக்கு 25 லட்சம் ரூபாயும், சேவை சார்ந்த தொழிலுக்கு 10 லட்சம் ரூபாயும், வங்கி கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், நகர்ப்புறங்களை சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதமும், கிராமப் பகுதிகளை சேர்ந்த பிரிவினருக்கு 25 சதவீத மானியமும் வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகிய சிறப்பு வகை பிரிவினருக்கு நகர்புறத்தில் இருப்பின் 25 சதவீதமும், கிராமப்புறத்தில் இருப்பின் 35 சதவீதமும் மானியம் வழங்கப்படும். பொதுப்பிரிவினர் முதலீடாக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு வகை பிரிவினர் முதலீடாக திட்ட மதிப்பீட்டில் ஐந்து சதவிதமும் செலுத்த வேண்டும். மீதத்தொகை வங்கி மூலம் கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர், சுய உதவி குழுக்கள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு சங்கங்கள், பதிவுசெய்த சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் விண்ணப்பிக்கலாம். உற்பத்தி தொழிலில் திட்ட மதிப்பீடு 10 லட்சம் ரூபாய். சேவை சார்ந்த தொழிலில் திட்ட மதிப்பீடு ஐந்து லட்சம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் திட்ட அறிக்கை, இயந்திர தளவாடங்களின் விலைப்பட்டியல் நகல், தொழில் ஆரம்பிக்கவுள்ள இடத்தின் வாடகை ஒப்பந்த பத்திரம், சொந்த இடமாக இருப்பின், நில பத்திர நகல், கட்டிட மதிப்பீடு மற்றும் வரைபட நகல் கொண்டுவர வேண்டும். சாதிசான்றிதழ் (ஆண்களுக்கு மட்டும்), கல்வி, பிறப்பு, இருப்பிட (ரேஷன்கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை) சான்றுகள், தொழில் முனைவோர், மேம்பாட்டு பயிற்சி பெற்றிருப்பின், அதற்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன், மாவட்ட தொழில் மையத்தில், நேரில் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும், ஜங்ஷன் அருகிலுள்ள, உதவி இயக்குநர், கதர் கிராமத்தொழில் வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து, விண்ணப்பங்களை வாங்கி விண்ணப்பிக்கலாம். தவிர, கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும், கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் விண்ணப்பத்தை பெற்றும், இணையதளத்தளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.   விழுப்புரம்: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்படி, படித்த இளைஞர்கள் பயன்பெறலாம் என மாவட்ட தொழில் மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்கிக்குறிப்பு: படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை கடந்த 2012-13ம் ஆண்டில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்துள்ள தொழில் முனைவோர் கள் சுயமாக தொழில் துவங்க, உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில்கள் துவங்கிட வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின்படி ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி ரூபாய் வரையிலான திட்ட மதிப்பீடுள்ள உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில்கள் துவங்க 25 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப் படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினர் 45 வயது வரை இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்ச வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பதாரர், அவரது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருத்தல் அவசியம். இத்திட்டத்தின் கீழ் 2014- 2015ம் ஆண்டிற்கு விழுப்புரம் மாவட்டத்தில் 37 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மானியம் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்படி, படித்த இளைஞர்கள் மாவட்ட தொழில்மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்