அதிகளவில் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள்: போக்குவரத்து துறை எச்சரிக்கை
புதுச்சேரி: அதிகளவில் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போக்குவரத்துத்துறை, பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்களுக்கு, கடந்த மாதம் தகுதிச் சோதனை நடத்தியது. அதில் கலந்து கொள்ளாத, வாகனங்களை கண்டறிவதற்காக, கடந்த 24ம் தேதி, சில இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில், 26 பள்ளி, கல்லுாரி உட்பட 30 வாகனங்களுக்கு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாத பஸ், அதிகப்படியான மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் கண்டறியப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். விதி மீறும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகன, ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக இயங்கும் வாகனங்களில் அளவுக்கு, அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதை தவிர்க்கும் வகையில், போதிய அளவில் புதிதாக பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு அனுமதி (பர்மிட்) வழங்க போக்குவரத்து துறை தயாராக உள்ளது. எனவே பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.