மாணவிகள் எண்ணிக்கை மக்கள் தொகையில் குறைவு; பள்ளி சேர்க்கையில் அதிகம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகையில் பெண்கள் குறைவாக இருந்த போதிலும், பள்ளி சேர்க்கையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக உள்ளனர். தமிழகத்தின் மிக பழமையான மாவட்டங்களில் ஒன்றானது கடலூர் மாவட்டம். 3,703 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் பெரும்பகுதி கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. விவசாயம், நெசவு மற்றும் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ள காரணத்தினால், மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 லட்சத்து 50 ஆயிரத்து 908 ஆண்கள், 11 லட்சத்து 34 ஆயிரத்து 486 பெண்கள் என மொத்தம் 22 லட்சத்து 85 ஆயிரத்து 395 பேர் இருந்தனர். பெண்களைவிட 16 ஆயிரத்து 421 ஆண்கள் அதிகம். அதாவது ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்களே இருந்தனர். அதே கால கட்டத்தில் குழந்தைகள் பாலின விகிதாச்சாரத்தில் 1000 ஆண்களுக்கு 957 பெண்களே இருந்தனர். அது கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 13 லட்சத்து 11 ஆயிரத்து 697 ஆண்கள், 12 லட்சத்து 94 ஆயிரத்து 217 பெண்கள் என மொத்தம் 26 லட்சத்து 5 ஆயிரத்து 914 ஆக உயர்ந்தது. 10 ஆண்டுகளில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 519 பேர் அதிகம். 1000 ஆண்களுக்கு 940 பெண்களும், குழந்தைகளில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 896 பெண்களே உள்ளனர். மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆண்களின் மக்கள் தொகை அதிகரித்தும், பெண்களின் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வருகிறது. அதேவேளையில் மாவட்டத்தில் பள்ளி சேர்க்கையில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் இயங்கி வரும் 1,700 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2013-14 கல்வியாண்டில் 61 ஆயிரத்து 402 மாணவர்களும், 64 ஆயிரத்து 743 மாணவிகளும் படித்தனர். மாணவர்களைவிட 3,341 மாணவிகள் அதிகம். இந்த கல்வி ஆண்டில் கடந்த 13ம் தேதி வரை 80 ஆயிரத்து 6 மாணவர்களும், 86 ஆயிரத்து 242 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மாவட்டத்தில் பெண்களைவிட 17 ஆயிரத்து 480 ஆண்கள் அதிகமாக இருந்த போதிலும், பள்ளி சேர்க்கையில் மாணவிகளைவிட 6,236 மாணவர்கள் குறைவாகவே சேர்ந்துள்ளனர். மாவட்டத்தில் மக்கள் தொகையில் ஆண்கள் அதிகமாக இருந்த போதிலும், பள்ளி சேர்க்கையில் மாணவர்கள் குறைவாக இருப்பது ஏன் என்பது புரியாமல் குழப்பமடைந்துள்ள கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதுகுறித்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மாவட்டத்தில் ஏற்கனவே பாலின விகிதாச்சாரத்தில் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் இடைவெளி அதிகரித்து வருவது பல்வேறு சமூக சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. அதனைத் தவிர்க்க கல்வி அறிவை புகட்ட வேண்டும். ஆனால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.