உள்ளூர் செய்திகள்

அரசு பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி பரிந்துரை

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுக்கலாம் என, பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, கடந்த 1984-85ம் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில், ஒரு சில துறைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லுாரி, தற்போது 13 துறைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பி.டெக்., எம்.டெக்., படிப்புகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநிலத்தின் முதலாவது பொறியியல் கல்லுாரி என்ற பெருமை பெற்ற இக்கல்லுாரியில் தொலைநோக்கு திட்டம் தீட்டப்படாததால் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட முடியவில்லை. கல்லுாரியில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததே இதற்கு முக்கிய காரணம். இக்கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து பெற கடந்த ஆறு ஆண்டுகளாக கல்லுாரி நிர்வாகம் எவ்வளவு முயன்றும் கைகூடவில்லை. பல்வேறு தடைகளுக்கு பின், புதுச்சேரி பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லுாரிக்கு நிரந்தர அங்கீகாரம் அளித்ததுடன், தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம் என, பரிந்துரை செய்தது. இதனடிப்படையில், சில மாதங்களுக்கு முன் கல்லுாரியை பல்கலைக்கழக மானிய குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு நடத்தினர். அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் எம்.பி.ஏ., அங்கீகாரம் வழங்கியிருந்ததை குழுவினர் கவனத்தில் எடுத்துக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, அண்மையில் செயற் குழுவில் வைக்கப்பட்டு, விவாதம் நடந்தது.இறுதியில், புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி வழங்கலாம் என, தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கும், அரசு பொறியியல் கல்லுாரி நிர்வாகத்திற்கும் முறைப்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக அகடமி கவுன்சில் கூடி, இது தொடர்பாக ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட உள்ளது. அரசு பொறியியல் கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம் என, யு.ஜி.சிக்கு புதுச்சேரி பல்கலைக் கழகம் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. தன்னாட்சி கிடைத்தால் தற்காலத்திற்கேற்ப பாடத் திட்டங்களை வடிவமைத்துக்கொள்வதோடு, பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியுதவிகளை பெற்று பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் புதிய பாடப் பிரிவுகளை ஆரம்பிக்க முடியும். இச் சூழலில், அரசு பொறியியல் கல்லுாரியில் சேர இந்தாண்டு கடும் போட்டி நிலவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்