உள்ளூர் செய்திகள்

பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் கால் முறிவு

கோவை: கோவையில் பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், எட்டாம் வகுப்பு மாணவனின் கால் முறிந்தது; இரண்டு மாணவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கோவை, டவுன்ஹால் அருகே, சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெற்று இயங்கும் இப்பள்ளியின் பின்புறம், விளையாட்டு மைதானம் உள்ளது. கூட்ஷெட் ரோட்டின் அருகே உள்ள மைதானத்தை சுற்றி, கருங்கற்களால் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம், உணவு இடைவேளையின்போது, மைதானத்தில் மாணவர்கள் பலர் அமர்ந்து உணவு அருந்தினர். மைதானத்தின் ஓரத்தில், கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த பழமையான காம்பவுண்ட் சுவர் மீது, சில மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தனர். அச்சமயம் திடீரென காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில், சுவற்றின் மீது அமர்ந்திருந்த எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வபுரத்தை சேர்ந்த முஸ்தபாவின், 13, இடது கால் முறிந்தது. இதேபோன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் ரத்தினபுரியை சேர்ந்த ஆகாஸ் பிரிட்டோ, 12, செட்டி வீதியை சேர்ந்த தர்மராஜின் மகன் ஹரிஹரன்,12, ஆகியோருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக ஆம்புலன்சில், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி காம்பவுண்ட் சுவர் விழுந்த வேகத்தில், அருகே கூட்ஷெட் ரோட்டில் இருந்த மாநகராட்சி சுற்றுசுவரும் சேதமடைந்து, கற்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. சம்பவ இடத்துக்கு வெரைட்டிஹால் ரோடு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், மிகவும் பழமையான காம்பவுண்ட் சுவற்றின் அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இதனால், உறுதி தன்மையை இழந்து, விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது என, தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மாணவன் சிக்கியதாக பரபரப்பு: வெரைட்டிஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தியபோது, மாணவன் ஒருவன் சுவர் இடிந்து விழுந்ததில், மண்ணுக்குள் புதைந்து விட்டதாக சிலர் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக மாநகராட்சி ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்தனர். மெதுவாக, இடிந்த காம்பவுண்ட் சுவற்றின் கற்களை அகற்றி, தேடி பார்த்தனர். பின், மாணவர் யாரும் மண்ணில் புதையவில்லை என, உறுதிப்படுத்தியதும், பெருமூச்சு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்