பள்ளி கழிப்பறை பயன்பாட்டிற்கு வராததால் மாணவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் பரிதாபம்
வாலாஜாபாத்: ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் மாணவ, மாணவியர் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க செல்ல வேண்டிய, பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கத்தில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1,252 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவியரின் வசதிக்காக பள்ளி அருகே, ஒரே கட்டடத்தில் தனித் தனியாக கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை கட்டடம் இன்னும் மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவியர், சிறுநீர் கழிக்க பள்ளி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாணவ, மாணவியரின் நலன் கருதி, பூட்டப்பட்டு உள்ள கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.