உயர்கல்வியில் பெண்கள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்
மதுரை: "உயர்கல்வியில் பெண்கள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்," என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் மணிமேகலை வலியுறுத்தினார். மதுரையில் இப்பல்கலை கல்வியியல் துறை சார்பில், மனிதவள மேம்பாடு மற்றும் மேலாண்மை கருத்தரங்கு துவங்கியது. துணைவேந்தர் மணிமேகலை துவக்கி வைத்து பேசுகையில், "பெண்கள் கல்வி 65 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. 45 சதவீதம் பேர் உயர் கல்விக்கு செல்வதில்லை. மாணவர் சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்றார். திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் நடராஜன் பேசுகையில், "வேலை வாய்ப்பிற்கான உயர்கல்வி அதிகரித்து வருகின்றன. ஆனால் மாணவர்களின் கல்வி தரம் குறைந்துள்ளது. கல்வியால்தான் வாழ்க்கை தரம் உயரும் என்பதை மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும். தரமான கல்வியை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும்," என்றார்.