கிராமங்களில் இருக்கும் செயல்படாத பொது நூலகங்கள்: வீணாகும் அரசு நிதி
நரிக்குடி: விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கட்டப்பட்ட பொது நூலகங்கள் செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் இதை கட்ட செலவிடப்பட்ட பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே பிரச்னைகளை சரிசெய்து, நூலகங்களை செயல்பட வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலுமே மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொது நூலகங்கள் கட்டப்பட்டுள்ளன. நரிக்குடி பகுதியில் அழகாபுரி, மேலப்பருத்தியூர், அன்னலட்சுமிபுரம், வேலானேரி, இருஞ்சிறை, டி.கடம்பங்குளம், வீரசோழன், வரிசையூர், புல்வாய்க்கரை, எழுவனி, திருச்சுழி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அவை உள்ளன. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அக்கட்டடங்கள் சில ஊராட்சிகளில் செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் அதற்கு செலவிடப்பட்ட அரசு நிதி வீணாகிறது. பல நூலகங்களுக்கு இதுவரை முழுமையான புத்தகங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சில நூலகங்களில் புத்தகங்கள் வழங்கப்பட்டும் அடிப்படை கட்டமைப்பு வசதி, நூலகர் இல்லாததால் செயல்படவில்லை. சில ஊராட்சிகளில் மட்டுமே நூலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் ஒரு சில நூலகங்களும் பெரும்பான்மையான நாட்களில் பூட்டப்பட்டு கிடக்கிறது என புகார் எழுகிறது. கிராமப்புற மாணவர்களின் அறிவை வளர்க்கும் பொருட்டும், பொழுதுபோக்கிற்காகவும் நூலகங்கள் கட்டப்பட்டன. ஆனால் தற்சமயம் எதற்கும் பயனில்லாமல் உள்ளது வேதனையான விஷயமாகும். நடவடிக்கை எடுக்க வேண்டும்: பல கிராமங்களில் உள்ள நூலகங்கள் ஊராட்சி அலுவலகமாகவும், மீட்டிங் ஹாலாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நூலகத்திற்கு ஊராட்சியிலிருந்து நூலகர் நியமித்துக் கொள்ளலாம். அப்படி இருந்தும் ஊராட்சிகளில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா, நூலகத்தின் பயன் பற்றி புரியவில்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிராமப் பகுதிகளில் அனைவரது வீட்டிலும் நாளிதழ்கள், வார இதழ்கள், இதர புத்தகங்கள் வாங்க சாத்தியமில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் நூலகத்திற்கு வந்து இவற்றை படித்து பல்வேறு விஷயங்கள், உலக நடப்புகளை தெரிந்து கொள்வர். நூலகர் இல்லை, புத்தகங்கள் இல்லை என செயல்படாத இந்த நூலகங்கள் நாளடைவில் இடிந்து எந்தவித பயன்பாட்டிற்கும் இல்லாமல் வீணாகப் போகும் அவலநிலை உள்ளது. உளுத்திமடை ஊராட்சி வாகைகுளம் நூலகம் இதுநாள் வரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. எனவே பிரச்னைகளை சரிசெய்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புற நூலகங்களையும் செயல்பட வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சுழி சீனிவாசகப் பெருமாள், "திருச்சுழியில் கட்டப்பட்டுள்ள நூலகம் இதுநாள் வரையிலும் வீணாகவே உள்ளது. படித்த இளைஞர்கள், மாணவர்கள் பொழுது போக்காகவும், அறிவை வளர்க்கவும் நூலகத்திற்கு செல்லலாம் என நினைத்தால் , அது எப்போதும் பூட்டியே கிடக்கிறது. ஏன், எதற்கு நூலகம் கட்டினார்கள் எனத் தெரியாமலேயே இந்தக் கட்டடம் வீணாகி விட வாய்ப்புள்ளது. பல ஊர்களில் இதே நிலைதான்" என்றார். புல்வாய்க்கரை செந்தில்குமார், "புல்வாய்க்கரை நூலகம் தற்சமயம் பயணிகளுக்கு நிழற்குடையாகவும், பூட்டிக் கிடந்தாலும் வெளியில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் கட்டடமாகவும் பயன்படுகிறது. நூலகத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மாணவர்கள் , பொதுமக்கள் பயன்பெறச் செய்ய வேண்டும் என்றார். மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பூட்டிக்கிடக்கும் கிராமப்புற நூலகங்களை செயல்பட வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.