தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உடற்பயிற்சி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஊராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், உடற்பயிற்சி நடந்தது. காவனுார் புதுச்சேரி, வேடபாளையம், பெருநகர், களியாம்பூண்டி, ரெட்டமங்கலம், திருமுக்கூடல், சாலவாக்கம், திருப்புலிவனம் ஆகிய எட்டு மையங்களில் நடந்த இப்பயிற்சி வகுப்பில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 128 தொடக்கப் பள்ளிகளில் இருந்து, 263 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த இந்த பயிற்சி வகுப்பில், மாணவர்கள் சோர்ந்துள்ள நேரங்களில், புத்துணர்ச்சி ஏற்படுத்த செய்தல் வகையிலான உடற்பயிற்சிகள் எவ்வாறு அளித்தல் என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களுக்கு கற்பிக்க செய்து, அதன்மூலம் உடற்திறனை மேம்பட செய்வது குறித்தும், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சியில், அனுபவம் வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.